இளம்பிள்ளை அருகே தொழிலாளி கழுத்தை அறுத்து படுகொலை

இளம்பிள்ளை அருகே தொழிலாளி ஒருவர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-03-22 22:00 GMT
இளம்பிள்ளை,

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை சந்தைப்பேட்டை அருகே ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் கரையில் முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவில் முன்பு நேற்று கழுத்து அறுக்கப்பட்ட நிலையிலும், வயிற்றில் கத்திக்குத்து காயங்களுடனும் ஒருவர் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் சங்ககிரி போலீஸ் துணை சூப்பிரண்டு அசோக்குமார், மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் ராஜாரணவீரன் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், பிணமாக கிடந்தவர் அதே பகுதியை சேர்ந்த ராஜூ (வயது 45) என்பதும், தொழிலாளி என்பதும், அவர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட ராஜூவுக்கு திருமணம் ஆகவில்லை. இவருக்கு 2 சகோதரர்கள் உள்ளனர். கிடைக்கும் வேலையை செய்து விட்டு, இரவில் வீட்டுக்கு வரும் ராஜூ, பின்னர் கோவில் முன்பு தினமும் தூங்குவது வழக்கம். இதன்படி நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்த அவர், கோவில் முன்பு சென்று தங்கி உள்ளார். அதன் பின்னர் நேற்று காலையில் பிணமாக கிடந்துள்ளார்.

மது குடிக்கும் பழக்கம் உள்ள அவர், தினமும் மது அருந்தி விட்டு வந்து கோவில் முன்பு தூங்குவார் என்று கூறப்படுகிறது. மேலும் அவர் அந்த பகுதியில் பணம் வைத்து சூதாடியும் வந்துள்ளார். இதன் காரணமாக ஏற்பட்ட தகராறில் அவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதனிடையே நேற்று காலை போலீசார் மோப்ப நாயை வரவழைத்தனர். மோப்ப நாய் கோவிலில் இருந்து சுமார் ½ கிலோ மீட்டர் தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்க வில்லை. இந்த கொலை தொடர்பாக போலீசார் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் அவர் கொலை செய்தாரா? இல்லையா? என்பது தெரியவரும் என போலீசார் கூறினார்கள்.

இந்த சம்பவம் இளம்பிள்ளை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்