மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

Update: 2018-03-22 22:00 GMT
விழுப்புரம், 

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளால் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் அச்சுறுத்தல் உள்ளது. இந்த அச்சுறுத்தலை போக்கவும் ஒருவேளை தீவிரவாதிகள் தாக்கினால் அதை எதிர்கொள்ள போலீசாருக்கு உரிய பயிற்சி அளிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் ஆண்டு தோறும் 2 முறை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் உள்ள கடலோர மாவட்டங்களில் ‘சாகர் காவச்’ என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், கூனிமேடு, அனிச்சங்குப்பம், பொம்மையார்பாளையம், கோட்டக்குப்பம் உள்ளிட்ட 19 கடலோர கிராமங்களில் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது.

இந்த பாதுகாப்பு ஒத்திகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் இளங்கோவன், முத்துமாணிக்கம் மற்றும் 10 இன்ஸ்பெக்டர்கள், 50 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 300 போலீசாரும், கடலோர காவல்படையினர் 100 பேரும் ஈடுபட்டனர்.

இந்த ஒத்திகையின்போது, தீவிரவாதிகள் வேடத்தில் கடல் வழியாகவோ அல்லது தரை மார்க்கமாக வாகனங்களில் கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் வருகிறார்களா? என விழிப்புடன் கண்காணித்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் மீனவ கிராமங்களிலும் சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் குறித்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த பாதுகாப்பு ஒத்திகை இன்றும் (வெள்ளிக்கிழமை) தொடர்ந்து நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்