பணிச்சுமையை குறைக்க வலியுறுத்தி ஆய்வுக்கூட்டத்தை புறக்கணித்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

பணிச்சுமையை குறைக்க வலியுறுத்தி ஆய்வுக்கூட்டத்தை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் புறக்கணித்ததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-03-22 22:00 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை திட்டப்பணிகள் தொடர்பாக மாதந்தோறும் ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. அதுபோல் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.

இதனிடையே செஞ்சி ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த சங்கர் என்பவர் நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இதனால் இவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர், கலெக்டர் அலுவலகத்தில் முறையிட்டனர். மேலும் அதிக பணிச்சுமை காரணமாகத்தான் சங்கர் இறந்துவிட்டார். எனவே இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க அனைவருக்கும் பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

ஆனால் திட்டமிட்டபடி ஆய்வுக்கூட்டம் நடைபெறும் என்று ஊரக வளர்ச்சித்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று காலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆய்வுக்கூட்டத்திற்கு வந்திருந்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 300-க்கும் மேற்பட்டோர் திடீரென கூட்டத்தை புறக்கணித்துவிட்டு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தனர். அதன் பின்னர் அவர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு நின்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அனைவருக்கும் பணிச்சுமையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

பின்னர் அவர்கள் அனைவரும் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனை நேரில் சந்தித்து இதுசம்பந்தமாக முறையிட்டனர். மேலும் ஆய்வுக்கூட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கும்படி அவர்கள் கேட்டுக்கொண்டதன்பேரில் கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கலெக்டர் சுப்பிரமணியன் கூறினார். இதையடுத்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்