விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டதை கண்டித்து சாலை மறியல்

ஆலங்குடி அருகே, விளம்பர பதாகை அகற்றப்பட்டதை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

Update: 2018-03-22 22:15 GMT
ஆலங்குடி,

ஆலங்குடி அருகே உள்ள கோவிலூரில் பழமையான சிவன்(பாலபுரீஸ்வரர்) கோவில் உள்ளது. சிதிலமடைந்த நிலையில் உள்ள இந்த கோவிலை புனரமைப்பு செய்ய செங்கவளநாட்டார்கள் முடிவு செய்தனர். இதற்காக கூட்டம் போடப்பட்டு திருப்பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. குழுவில், அந்த பகுதியில் உள்ள ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என்று கூறி தனியாக கோவில் திருப்பணிகள் தொடர்பாக ஆலோசனைக்கூட்டம் நடத்த முடிவு செய்தனர். ஆலோசனைக்கூட்டம் தொடர்பாக விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டது. இதுகுறித்து செங்கவளநாட்டார்கள் ஆலங்குடி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல்முத்தலிபு, போலீஸ் இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன், ஆலங்குடி தாசில்தார் ரெத்தினாவதி மற்றும் வருவாய் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதைத்தொடர்ந்து அந்த விளம்பர பதாகை அகற்றப்பட்டது.

இதனை கண்டித்து விளம்பர பதாகைகள் வைத்தவர்கள் கோவிலூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்கள், தாங்கள் வைத்திருந்த இடத்தில் மீண்டும் விளம்பர பதாகையை வைக்க அனுமதி வழங்கினால்தான், சாலை மறியலை கைவிடுவோம் என்றனர். அதைத்தொடர்ந்து விளம்பர பதாகைகள் அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது. இதைதத்தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

மேலும், இது தொடர்பாக நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில் ஆலங்குடி தாசில்தார் தலைமையில் சமாதான கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந் நிலையில் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், கோவிலூர் பகுதியில் உள்ள அனைத்து விளம்பர பதாகைகளையும் அகற்றும்படி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள விளம்பர பதாகைகளை அகற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் செய்திகள்