நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் அவசர ஆலோசனை

நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் தீவிர ஆலோசனை நடத்தினார்கள்.

Update: 2018-03-22 22:15 GMT
புதுச்சேரி,

பாரதீய ஜனதா கட்சி தலைவர் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய 3 பேரையும் நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்தது செல்லும் என்று அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது.

புதுவை சட்டமன்றத்துக்கு 3 எம்.எல்.ஏ.க்கள் நியமனம் தொடர்பாக உள்துறை அமைச்சகத்திடம் இருந்து புதுவை சட்டப்பேரவைக்கும், மாநில அரசுக்கும் ஒரு கடிதம் வந்தது. அதில், 3 பேரின் பெயர்கள் இருந்தன. ஆனால், அவர்களின் தந்தை பெயர், முகவரி இல்லை.

உள்துறை நியமனம் செய்த எம்.எல்.ஏ.க்களின் நியமனம் செல்லாது என முதல்-அமைச்சரின் நாடாளுமன்ற செயலர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதேபோல புதுச்சேரியை சேர்ந்த பெண் ஒருவரும் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மேலும், தங்களது நியமனத்தை அங்கீகரிக்கக்கோரி எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்ட 3 பேரும் ஒரு மனுவை தாக்கல் செய்தனர்.

இந்த 3 வழக்குகளும் விசாரணைக்கு வந்தபோது, 2 வழக்குகளில் மட்டும் புதுவை அரசு பிரதிவாதியாக சேர்ந்தது. பிரதிவாதியாக புதுவை அரசு இருப்பதால் தீர்ப்பின் நகல் கிடைத்ததும் அதை முழுவதும் படித்து பார்த்துவிட்டு அமைச்சர்களுடன் கலந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்கிடையே நேற்று மாலை சட்டசபை வளாகத்தில் உள்ள கேபினெட் அறையில் அமைச்சர்கள் அவசரமாக கூடி ஆலோசனை நடத்தினார்கள். கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். இதில் அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், கந்தசாமி, கமலக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

தீர்ப்பு குறித்து இந்த வழக்கின் மனுதாரரும், முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளருமான லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது, “தீர்ப்பின் நகல் கிடைத்தவுடன் முழுவதும் படித்து பார்த்துவிட்டு உச்ச நீதிமன்றத்தில் நிச்சயம் மேல்முறையீடு செய்வோம். இதற்காக நான் டெல்லி செல்ல உள்ளேன்” என்றார்.

மேலும் செய்திகள்