ராமநாதபுரத்தில் டிஜிட்டல் முறையில் கல்வி கையடக்க கணினியில் அசத்தும் அரசு பள்ளி மாணவ-மாணவிகள்

ராமநாதபுரத்தில் டிஜிட்டல் முறையில் கல்வி கற்பிக்கப்படும் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் கையடக்க கணினியில் கல்வி கற்று அசத்துகின்றனர்.

Update: 2018-03-22 22:00 GMT
ராமநாதபுரம்,

தமிழகத்தில் மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் வருகிற கல்வி ஆண்டு முதல் பாடப்புத்தகங்கள் மாற்றியமைக்கப்பட உள்ளன. இதற்கு முன்னோட்ட மாக இந்த ஆண்டு மூன்றாம் பருவ பாடங்கள் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகியவை மின்னணு முறையில் கையடக்க கணினி எனப்படும் டேப்லட் மூலம் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது. சோதனை முயற்சியாக ராமநாதபுரம் ஒன்றியத்தில் வள்ளல் பாரி நடுநிலைப்பள்ளி உள்பட 10 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் டிஜிட்டல் முறையில் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்காக 10 பள்ளிகளுக்கும் 109 கையடக்க கணினி எனப்படும் டேப்லட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டுஉள்ளன. இதற்காக சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் அனைவரும் கையடக்க கணினியில் இணைக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன் கூறியதாவது:- முதல் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களின் வகுப்பறைகளில் உள்ள அனைத்து மாணவ-மாணவிகளின் பெயர்களும் ஆசிரியர்களின் கையடக்க கணினியில் இணைக்கப்பட்டு அவர்களுக்கான பாடங்கள் பகிரப்படும். இந்த பாடங்களை 4 மாணவ-மாணவிகளை ஒரு குழுவாக கொண்டு ஒவ்வொரு கையடக்க கணினி வழங்கப்பட்டுஉள்ளது. இந்த கணினியில் சம்பந்தப்பட்ட குழுவை சேர்ந்த 4 மாணவ-மாணவிகளும் தங்களுக்கான பாடங்களை செயல்முறை வடிவில் ஒளி, ஒலியாக கண்டு மனதில் பதியவைத்துக்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.

கையடக்க கணினி மூலம் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பாடங்களின் முடிவில் கேள்விகள் கணினியில் கேட்கப்பட்டு அதற்கான பதிலை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பதிலை ஆன்லைன் மூலம் இணைக்கப்பட்டுள்ள ஆசிரியரின் கையடக்க கணினியில் பார்த்து விடைகளை திருத்தி மதிப்பெண் வழங்க வழிவகை செய்யப்பட்டுஉள்ளது. கையடக்க கணினி கல்வி ஒருபுறம் இருக்க இதுதவிர, மாணவர்களுக்கு நவீன தொழில் நுட்பத்தில் மூன்றாம்பருவத்திற்கான புத்தகங்கள் வழங்கப்பட்டுஉள்ளன. இந்த புத்தகங்களில் பக்கத்திற்கு பக்கம் ஒவ்வொரு பாடங்களுக்கும் அருகிலும் டிஜிட்டல் குறியீடு மற்றும் கியூஆர் கோடு என்படும் தொழில்நுட்ப குறியீடு பொறிக்கப்பட்டுஉள்ளது. இந்த குறியீட்டை மாணவ-மாணவிகள் தங்களின் ஆன்ட்ராய்டு செல்போனில் ஸ்கேனிங் செய்தால் சம்பந்தப்பட்ட பாடங்கள் செயல்முறை வடிவமாக ஒளி, ஒலியில் காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுஉள்ளது. இந்த பாடங்களை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு எளிதில் மனதில் பதிந்து வருங்கால தேவைக்கு ஏற்ப தங்களின் திறனை வளர்த்து கொள்ள வழிவகை ஏற்பட்டுஉள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதுபற்றி வள்ளல் பாரி பள்ளி தலைமை ஆசிரியை எஸ்தர் ராணி கூறியதாவது:- கையடக்க கணினி மூலம் கல்வி கற்பிக்கும் முறை மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

சிறுவயதிலேயே கணினியில் கல்வி கற்கும் முறையை மகிழ்ச்சியுடன் பார்த்து படித்து வருகின்றனர். சின்னஞ்சிறிய வயதில் கணினியில் கல்வி கற்பது இயலுமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் அதற்கு நேர்மாறாக குழந்தைகள் ஆர்வமுடன் ஆச்சர்யப்பட வைக்கும் வகையில் அதனை கையாண்டு சிறப்பாக கல்வி கற்று அசத்தி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்