ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல்

பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு பா.ஜ.க.வை சம்பந்தப்படுத்திய ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி அளித்தார்.

Update: 2018-03-22 23:00 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த மணவாளநகரில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க.வின் சக்தி கேந்திரம் மற்றும் மகாசக்தி கேந்திரத்தின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-

பா.ஜ.க. சார்பில் தமிழகம் முழுவதும் தமிழ்த்தாமரை யாத்திரை நடத்தி வருகிறோம். பா.ஜ.க. அமைப்பு ரீதியாக உள்ள 49 மாவட்டங்களில் 29 மாவட்டங்கள் தொடர் சுற்றுப்பயணம் செய்து முடிக்கப்பட்டுள்ளது. 49 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் முடிந்த பிறகு வருகிற 8-ந்தேதி சென்னை வேளச்சேரியில் தென்சென்னை பா.ஜ.க. சார்பில் யாத்திரை நிறைவையொட்டி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் யாத்திரைக்கு அயராது உழைத்த அனைத்து மாவட்ட தலைவர்களும் மரியாதை செய்யப்படுவார்கள்.

தமிழகத்தில் எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க பா.ஜ.க. தயாராக உள்ளது. உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தி மக்களுக்கான நல்ல திட்டங்கள் மக்களுக்கு கிடைக்கும்படி தமிழக அரசு செய்யவேண்டும் என்பதே எனது கோரிக்கை.

ரதயாத்திரையால் சட்டம் ஒழுங்கு பாதிக்கவில்லை. மு.க.ஸ்டாலின், ஜவாஹிருல்லா, திருமாவளவன் ஆகியோர் அமைதியாக சென்ற ரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தி சட்டம் ஒழுங்கை அவர்கள்தான் சீர்குலைத்தனர். பெரியார் சிலை உடைக்கப்பட்டவுடன் பா.ஜ.க.தான் காரணம் என குற்றம் சாட்டினர்.

தற்போது சிலையை உடைத்தது பா.ஜ.க.வை சேர்ந்தவர் இல்லை என தெரிய வந்துள்ளது. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வை பா.ஜ.க.வுடன் சம்பந்தப்படுத்தி பேசிய தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். அதே போல ராகுல்காந்தி பெரியார் சிலை உடைப்புக்கு ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வை சம்பந்தப்படுத்தி டுவிட்டரில் பதிவிட்டது தவறான கருத்தாகும். எனவே அவரும் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழகத்தில் பா.ஜ.க. பலம் பொருந்திய கட்சியாக மாறும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் லோகநாதன், மாநில செயலாளர் கரு.நாகராஜன், பொதுச்செயலாளர்கள் ராஜ்குமார், அஸ்வின், மதுசூதனன், முன்னாள் எம்.எல்.ஏ. ரவிராஜ், மாவட்ட செயலாளர்கள் பாலாஜி, கருணாகரன், ராஜசேகர், செல்வன், மாவட்ட இளைஞரணி தலைவர் ஆர்யா சீனிவாசன், திருவள்ளூர் நகர செயலாளர் வி.எஸ்.ரகுராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக முன்னாள் எம்.எல்.ஏ. கோ.ரவிராஜ் தலைமையில் பல்வேறு கட்சியில் இருந்து விலகிய சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் தங்களை பா.ஜ.க.வில் இணைத்துக்கொண்டனர். அவர்களுக்கு தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்துகளை தெரிவித்தார்.

மேலும் செய்திகள்