தீபிகாவின் தீவிரம்!

தற்போது 23 வயதாகும் தீபிகா, ஒரு காலத்தில் தான் நினைத்தது மாதிரியே ஒரு முன்உதாரணப் பெண்ணாகிவிட்டார்.

Update: 2018-03-23 23:00 GMT
ட்டோ டிரைவரான அப்பாவிடமும், நர்சான அம்மாவிடமும் தீபிகாகுமாரி கேட்டது, 3 மாத கால அவகாசம்தான்.

“மூன்று மாதத்துக்குள் நான் விளையாட்டுத் துறையில் சாதித்துக் காட்டுவேன். இல்லாவிட்டால் வீட்டுக்கே திரும்பிவந்து விடுகிறேன்.”

விளையாட்டுத் துறையில் மற்றவர்கள் திரும்பிப் பார்க்கிற மாதிரி சாதனை புரிய வேண்டும், அதன் மூலம் தன்னைப் போன்ற கிராமப்புறப் பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக வேண்டும் என்பது தீபிகாவின் தீவிர ஆசை.

பெற்றோரிடம் சொன்னது மாதிரி நடந்திராவிட்டால் தீபிகா திரும்பி வந்து வழக்கமான வீட்டு வேலைகளில் முடங்கியிருப்பார், காலாகாலத்தில் ஒரு பையனை கரம் பிடித்து, அடையாளம் தெரியாத கோடிக்கணக்கான பெண்களில் ஒருவராகியிருப்பார்.

ஆனால் நடந்தது வரலாறு. வில்வித்தையில் விறுவிறுவென்று உச்சத்துக்கு ஏறினார் இந்த ராஞ்சி ரது கிராமத்துப் பெண். தனது 18 வயதில் உலகின் ‘நம்பர் 1’ வில்வித்தை வீராங்கனை ஆகிவிட்டார்.

தற்போது 23 வயதாகும் தீபிகா, ஒரு காலத்தில் தான் நினைத்தது மாதிரியே ஒரு முன்உதாரணப் பெண்ணாகிவிட்டார்.

தொடர்ந்து சாதிக்கும் துடிப்புடன் இயங்கிக்கொண்டிருக்கும் தீபிகாவுடன்...

18 வயதிலேயே உலகின் ‘நம்பர் 1’ வில்வித்தை வீராங்கனையாகிவிட்ட உங்களுக்கு, அதைத் தொடர்ந்து பராமரிக்க என்ன மாதிரியான நெருக்கடி இருந்தது?

உண்மையில், அப்போது நான் உலகின் முதலிட வீராங்கனை ஆனதன் மதிப்பையே உணரவில்லை. பிற்பாடுதான் நான் அதை உணர்ந்தேன். நான் ‘நம்பர் 1’ ஆனபோது, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது பற்றிய பரபரப்புதான் என்னுள் இருந்ததே தவிர, உலகத் தரவரிசையில் முதலிடம் என்பது என் தலைக்குள் நுழையவே இல்லை. வில்வித்தையிலேயே கவனம் செலுத்திக்கொண்டிருந்த நான், முதலிடத்தையே மறந்து விட்டேன். அப்போது அவ்வளவு சின்னப்பொண்ணு நான். உலகின் உச்ச வீராங்கனையாவது எவ்வளவு பெரிய விஷயம் என்று எனக்குத் தெரியவே இல்லை.

இரு ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டும் பதக்கம் வெல்ல முடியவில்லை என்ற வருத்தம் உங்களுக்கு இருக்கிறதா?

ஆமாம், நாம் ஒன்றுக்காக கஷ்டப்பட்டு உழைத்தும், அது கிடைக்காமல் போகும்போது வருத்தமாகத்தானே இருக்கும்? நாம் சரியாகப் பயிற்சி செய்யவில்லையோ, நமது செயல்பாடு முறையாக இல்லையோ என்றெல்லாம் தோன்ற ஆரம்பித்துவிடும்.

சமீபத்தில் வெளியான, உங்களைப் பற்றிய ஆவணப்படத்தில், 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் ஏமாற்றத்துக்குப் பின் வில்வித்தையை விட்டே விலகிவிடுவோமா என்று யோசித்ததாகச் சொல்லியிருக்கிறீர்கள். அந்த அளவுக்கு விரக்தி ஏற்பட்டதா?

விரக்தி இருக்கத்தான் செய்தது. ஒலிம்பிக் ஏமாற்றத்துக்குப் பிறகு, எதையுமே செய்யத் தோணவில்லை. சிலசமயங்களில், நாம் தினமும் எந்நேரமும் ஒரே வேலையைச் செய்துகொண்டிருப்பது அலுப்பை ஏற்படுத்துமில்லையா? அதனால்தான் நாங்கள் அவ்வப்போது ஓய்வு எடுக்கிறோம், மனதில் புத்துணர்ச்சியை ஏற்றிக்கொண்டு மறுபடி விளையாட்டுக்கு வருகிறோம், புதிதாய் ஆரம்பிக்கிறோம். ஒரே வேலையை ஒரே மாதிரி திரும்பத் திரும்ப செய்துகொண்டிருந்தால் அலுப்புதான் ஏற் படும். செய்யும் வேலையில் சுவாரசியத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால், அதைச் சற்று வித்தியாசமாகச் செய்ய வேண்டும்.

நீங்கள் முதன்முதலில் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டபோது எப்படி இருந்தது?

நான் வித்தியாசமாய் எதையும் உணரவில்லை. வழக்கம்போலத்தான் இருந்தது. அந்த 2012-ல் ஒலிம்பிக் போட்டி என்பது உலகக் கோப்பை போட்டிகளை விட மிகவும் பெரிது என்பது எனக்குத் தெரியவில்லை. உலகக் கோப்பை போட்டிகளில் ஊடகங்கள் பெரிதாக கவனம் செலுத்தியதில்லை. மக்களுக்கும் அதில் ஆர்வம் இருந்ததில்லை. ஆனால் ஆசிய, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், உலக சாம்பியன்ஷிப்பில் மக்கள் ஆர்வம் காட்டினார்கள். அதிலும் ஒலிம்பிக் போட்டி வந்தபோது மக்கள் அதீத உற்சாகமானார்கள். அந்நிலையில் என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை. எனக்கு அதெல்லாம் புரியவில்லை. ஒலிம்பிக் என்பது எனக்கு அதீதமாக இருக்க, அதைக் கையாளத் தெரியவில்லை. அந்தச் சூழல் எனக்கு ரொம்ப வித்தியாசமாக இருந்தது. ‘நாம் வழக்கம்போல ஒரு போட்டியில் பங்கேற்கப் போகிறோம். அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?’ என்றுதான் நான் நினைத்தேன்.

உங்களைப் போன்ற முன்னணி வீராங்கனைகளுக்கு தற்போதைய வில்வித்தைப் பயிற்சி சூழல் எப்படி இருக்கிறது?

இன்னும் எங்களுக்கு சரியான பயிற்சியாளர் அமையவில்லை. ஒரு நல்ல பயிற்சியாளருக்கான தேடுதலை நாங்கள் 2016-ம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டோம். இன்னும் அப்படிப்பட்ட ஒருவர் அமையவில்லை. சர்வதேச அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களை எல்லாம் மற்ற நாடுகள் கூட்டிக்கொண்டுவிட்டன.

மனநலப் பயிற்சியாளர் ஒருவர் தேவை என்று ஆவணப்படத்தில் கூறியிருக்கிறீர்கள். அப்படிப்பட்டவர் கிடைத்துவிட்டாரா?

எங்களுக்கு ஒரு மனநலப் பயிற்சியாளர் நியமிக்கப்பட்டிருக்கிறார், ஆனால் நிரந்தர அடிப் படையில் அல்ல. அவர் நிறைய நேரத்தை எங்களுடன் செலவிட வேண்டும், ஆனால் இங்கே நிறைய வில்வித்தை அகாடமிகள் இருக்கின்றன. நான் வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு மனநலப் பயிற்சி யாளரின் உதவியையும் பெறுகிறேன், ஆனால் அவர் எங்களுடன் கூடவே இருக்க முடியாதே?

கேள்வியுடன் முடிக்கிறார், தீபிகாகுமாரி.

மேலும் செய்திகள்