இளமை குறையாத தேவதை
சீனாவில் வானிலை அறிவிப்பாளராக பணியாற்றி வரும் பெண் ஒருவர், கடந்த 22 ஆண்டுகளாக மாறாத இளமை தோற்றத்துடன் காட்சியளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சீன தொலைக்காட்சியில் வானிலை அறிவிப்பாளராக பணியாற்றி வருபவர் யாங் டான். தற்போது 44 வயதாகும் இவர், கடந்த 22 ஆண்டுகளாக இந்தப் பணியில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், இதில் ஆச்சரியம் என்னவென்றால் இவரின் இளமையான தோற்றம் மட்டும் மாறவில்லை என்பது தான். இதனாலேயே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், இவரின் வித்தியாசமான பாணி மற்றும் இளமையை பாராட்டும் விதமாக, வானிலை நிகழ்ச்சி தயாரிப்பாளர் ‘இளமை தேவதை’ எனும் பெயரில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
மகளிர் தினத்தன்று வெளியிடப்பட்ட இந்த வீடியோவில், யாங் டான் 1996–ம் ஆண்டு முதல் 2018–ம் ஆண்டு வரை வானிலை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய காட்சிகள் உள்ளன.
இது குறித்து லி யாங் என்பவர் கூறுகையில், ‘‘நான் சில ஆண்டுகளாக இவரது நிகழ்ச்சியை கவனித்து வருகிறேன். இந்த வீடியோவை பார்த்த பிறகுதான் இவருக்கு 44 வயது என்று தெரிந்தது. என்னால் நம்பவே முடியவில்லை. ஒருவர் 22 ஆண்டுகளாக எப்படி முதுமையடையாமல் இருக்கிறார் என்று ஆச்சரியமாக இருக்கிறது. 22 வயதில் இருந்ததை விட, 44 வயதில் இன்னும் இளமையாகவும், அழகாகவும் இருப்பதாகத் தோன்றுகிறது. சரியான நபருக்கு கிடைத்த அங்கீகாரம்’’ என தெரிவித்துள்ளார்.