கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது 8.54 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்

தேர்வு மையத்தில் செல்போன் பயன்படுத்த தடை, 8.54 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.

Update: 2018-03-21 23:22 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. 8.54 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். இதையொட்டி தேர்வு மையத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. ஆண்டு பொதுத்தேர்வு நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதில் மாநிலம் முழுவதும் 8 லட்சத்து 54 ஆயிரத்து 424 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். இதில் மாணவர்கள் 4 லட்சத்து 56 ஆயிரத்து 103 பேரும், மாணவிகள் 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 பேரும் ஆவார்கள். மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்து 817 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இதில் 45 மையங்கள் பதற்றமானவை என்றும், 23 மையங்கள் அதிக பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டு உள்ளது. அந்த மையங்களில் கூடுதல் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்வில் முறைகேடுகளை தடுக்க கல்வித்துறை உயர் அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2,043 அதிகாரிகள் மேற்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு தேர்வு மையத்திற்கு 2 போலீசார் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்வு மையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அந்த அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அவர்கள் தேர்வு மைய வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு மையங்களில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவடைந்ததும் விடைத்தாள்கள் சேகரிக்கப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்படும். அந்த அறையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 080-23310075, 23310076 என்ற எண்ணில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அல்லது பெற்றோருக்கு தேர்வு தொடர்பாக ஏதாவது சந்தேகம் எழுந்தால் அந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பேசலாம் என்று கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.

காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை அந்த உதவி மையம் செயல்படும். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தரைதளத்தில் இருக்கை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று தேர்வு மைய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்