துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தின் கழிவறையில் கிடந்த 1 கிலோ தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தின் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ரூ.32 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 50 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2018-03-21 22:45 GMT
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வரும் விமானங்களில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள், விமானங்களில் வந்திறங்கிய பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது துபாயில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தது. ஆனால் அதில் வந்த பயணிகள் யாரும் சந்தேகப்படும்படியாக இல்லாததால், சுங்க இலாகா அதிகாரிகள் அந்த விமானத்தில் ஏறி சோதனை செய்தனர்.

விமானத்தில் உள்ள கழிவறை அருகே ஒரு பை மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த பையை பிரித்து பார்த்தபோது அதில், 9 தங்க கட்டிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ரூ.32 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 50 கிராம் எடைகொண்ட தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

துபாயில் இருந்து சென்னை வந்த அந்த விமானம், மீண்டும் சென்னையில் இருந்து உள்நாட்டு விமானமாக புறப்பட்டு செல்லும். எனவே துபாயில் இருந்து அந்த தங்கத்தை கடத்தி வந்தவர்கள், அதை கழிவறையில் மறைத்து வைத்துவிட்டு சென்று உள்ளனர். பின்னர் உள்நாட்டு பயணி போல் அந்த விமானத்தில் செல்ல வருபவர், கழிவறையில் வைக்கப்பட்டு உள்ள தங்கத்தை எடுத்துச்செல்ல திட்டமிட்டுள்ளனர்.

எனவே துபாயில் இருந்து இந்த தங்க கட்டிகளை கடத்தி வந்தது யார்?, உள்நாட்டு பயணியாக வந்து அந்த தங்கத்தை எடுத்துச்செல்ல வந்தது யார்? இவர்களுக்கும் சர்வதேச தங்கம் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்