காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கு: போலீஸ் காவலில் முக்கிய குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்

புதுவை காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் சரணடைந்த முக்கிய குற்றவாளியை போலீசார் காவலில் எடுத்து விசாரித்ததில் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். ‘ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததால் தீர்த்துக்கட்டினேன்’ என அவர் போலீசில் தெரிவித்துள்ளார்.

Update: 2018-03-21 23:45 GMT
புதுச்சேரி,

புதுவை வைத்திக்குப்பத்தை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரான ஆம்புலன்ஸ் உரிமையாளர் மாறன் கடந்த 6-ந் தேதி இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பெரியகடை போலீசார் அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி, அவரது மனைவி திலகா உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிலரை கைது செய்தனர்.

முக்கிய குற்றவாளியான மூர்த்தி கடந்த 14-ந் தேதி பண்ருட்டி கோர்ட்டில் சரணடைந்தார். மேலும் சிலரும் கோர்ட்டில் சரணடைந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மொத்தம் 11 பேர் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மாறன் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள மூர்த்தியின் மனைவி திலகா, வினோத் மற்றும் கன்னுக்கட்டி கணேஷ் என்பவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

இந்த நிலையில் மாறன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மூர்த்தியை காவலில் எடுத்து விசாரிக்க பெரியகடை போலீசார் முடிவு செய்தனர். அதன்படி புதுச்சேரி நீதிமன்றத்தில் கடந்த 19-ந் தேதி மனு தாக்கல் செய்தனர். மூர்த்தியை 2 நாட்கள் காவலில் வழங்கி போலீசுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதைத் தொடர்ந்து மூர்த்தியை காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர். அப்போது மூர்த்தி போலீசில் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

மாறனுக்கும் எனக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இதற்கிடையே மாறன் ஊர் பஞ்சாயத்தாருடன் சேர்ந்து என்னை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தார். ஊருக்குள் வரவிடாமல் செய்ததுடன் என் குடும்பத்தினருடன் ஒன்றாக இருக்க முடியாமல் செய்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த நான் மாறனை தீர்த்துக்கட்ட முடிவு எடுத்தேன். அதன்படி ஆதரவாளர்களுடன் சேர்ந்து மாறனை கொலை செய்தேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதற்கிடையே 2 நாட்கள் போலீஸ் காவல் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து பெரியகடை போலீசார் மூர்த்தியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்