மேட்டூர் காவிரி ஆற்றில் மீன்கள் செத்து மிதந்தது குறித்து விசாரணை நடத்த உத்தரவு
மேட்டூர் காவிரி ஆற்றில் மீன்கள் செத்து மிதந்தது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக கலெக்டர் ரோகிணி தெரிவித்தார்.
சேலம்,
சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் நேற்று வனத்துறை மேம்பாட்டு கட்டிட அடிக்கல் நாட்டு விழாவும், பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் உபகரணங்கள் வழங்கும் விழாவும் நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் ரோகிணி கலந்து கொண்டு புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் வனத்துறைக்கு வழங்கப்பட்ட உபகரணங்களை பார்வையிட்டார். இதையடுத்து கலெக்டர் ரோகிணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மேட்டூர் காவிரி ஆற்றில் மீன்கள் செத்து மிதந்தது தொடர்பாக விசாரணை நடத்த பொதுப்பணித்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பேரில் அவர்களும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை அறிக்கை வந்த பிறகு தான் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மீனவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும்.
மேலும் மீன்கள் செத்து மிதந்த பகுதியில் இருந்து தண்ணீர் மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த அறிக்கை வந்த பின்னர் தான், மீன்கள் இறந்த இடத்தில் உள்ள தண்ணீரில் தனியார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறிய ரசாயன கழிவுநீர் கலந்துள்ளதா? இல்லையா? என்பது தெரியவரும். ரசாயனம் நீர் கலந்தது தெரியவந்தால், அந்த கழிவுநீர் காவிரி ஆற்றில் கலக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.