ஆர்ப்பாட்டத்தின் போது நகராட்சி அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி

ராஜபாளையத்தில் கட்டிட வரி விதிப்பில் பாரபட்சம் காட்டுவதாக கூறி நகராட்சி அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆணையாளர் அறை முன்பு வாலிபர் தீக்குளிக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-03-21 22:30 GMT
ராஜபாளையம்,

ராஜபாளையம் நகராட்சியில் சொத்து வரி குறித்து பொதுமக்கள் சார்பில் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.அதில் ராஜபாளையம் நகராட்சியில் 6 ஆண்டுகளுக்கு முன்பு முதல் தற்போது வரை கட்டிடங்களுக்கான வரி விதிப்பில் பாரபட்சம் காட்டுவதாகவும், குறைந்த பரப்பளவில் உள்ள கட்டிடங்களுக்கு அதிகப்படியான வரியும், அதே நேரத்தில் அதிக பரப்பளவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு குறைந்த கட்டணம் வரியாக வசூலிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

வழக்கினை விசாரித்த நீதிபதிகள், கட்டிட உரிமையாளருக்கு வரி விதிப்பு தொடர்பாக முதலில் நோட்டீஸ் வழங்க வேண்டும், உரிமையாளர் முன்னிலையில் கட்டிட அளவுகள் சரிபார்க்கப்பட்டு நகராட்சி சட்ட விதிகளுக்கு உட்பட்டு வரி விதிப்பு செய்து, உரிமையாளருக்கு வரி குறித்து அறிவிப்பு அறிக்கை வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் இருந்து ராமராஜ் தலைமையில் ஏராளமானோர் நகராட்சி அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஐகோர்ட்டு உத்தரவினை மதிக்காமல் தொடர்ந்து பொதுமக்களிடம் வரி விதிப்பு என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலித்து வருவதாகவும், இதனால் நடுத்தர பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும், மேலும் நகராட்சியில் அரசு ஊழியர் என்ற பெயரில் இடைத்தரகர்கள் பொதுமக்களிடம் பணம் பெறுகின்றனர், இது குறித்து ஆணையாளரிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்க ஆணையாளர் முன்வரவில்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசியில் வரி விதிப்பு ரத்து என்ற நிலையில் ராஜபாளையம் நகராட்சியில் மட்டும் வரி விதிப்பை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க முன் வரவில்லை, பாரபட்ச நிலை தொடரும் பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டத்தினை தீவிரப்படுத்த போவதாகவும் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் இந்திய மருத்துவர் சங்க தலைவர் கோதண்டராமர், சாந்திலால், ஜவஹர், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சம்சுதீன் மற்றும் ரவி, மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.

அப்போது ராம்சிங் என்ற வாலிபர் ஆணையாளர் அறை முன்பு உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து அவரையும், நற்பணி மன்ற தலைவர் ராமராஜையும் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் நகராட்சி அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 

மேலும் செய்திகள்