அருப்புக்கோட்டையில் அடிப்படை வசதி கோரி பெண்கள் மறியல்

அடிப்படை வசதி செய்து தரக்கோரி பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-03-21 22:15 GMT
அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை நகரசபை 9-வது வார்டு கணேஷ் நகர், நேரு நகர், நேதாஜி தெரு பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்கள் பகுதிகளுக்கு நகராட்சியிலிருந்து சாலை வசதி, வாருகால் வசதி, குடிதண்ணீர் வசதி, குப்பைத்தொட்டி போன்ற அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என்று கோரி வந்தனர்.

இதில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆவேசமடைந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று திருச்சுழி சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து பெண்கள் கூறுகையில், நாங்கள் இந்தப் பகுதிக்கு குடிபெயர்ந்து 20 வருடங்களுக்கும் மேலாகிறது. இவை அனைத்தும் விரிவாக்க பகுதி என்பதால் நகராட்சி எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை. இது பற்றி பல முறை அதிகாரிகளிடம் கூறியும் பலனில்லை. நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குப்பை வரிகளை மட்டும் கண்டிப்புடன் வசூல் செய்கின்றனர் என்றனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டியன், நகராட்சி உதவி பொறியாளர் காளஸ்வரி, சுகாதார ஆய்வாளர் சரவணன் ஆகியோர் அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனர். அதன் பேரில் சாலை மறியலை பெண்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்