நாகர்கோவிலில் வனநாள் குறித்த விழிப்புணர்வு பேரணி கலெக்டர் தொடங்கி வைத்தார்

நாகர்கோவிலில் உலக வனநாள் குறித்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பிரசாந்த் வடநேரே தொடங்கி வைத்தார்.

Update: 2018-03-21 22:45 GMT
நாகர்கோவில்,

உலக வனநாளை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நேற்று நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன்பு தொடங்கியது. பேரணியை கலெக்டர் பிரசாந்த் வடநேரே கொடியசைத்து தொடங்கி வைத்தார். வனங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடந்த இந்த பேரணி நாகர்கோவில் டதி பள்ளி சந்திப்பு, பெண்கள் கிறிஸ்தவக்கல்லூரி சந்திப்பு, வடசேரி பஸ் நிலையம் வழியாக வடசேரியில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் நிறைவடைந்தது.

பேரணியில் ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரி மாணவர்கள், அய்யப்பா கல்லூரி மாணவிகள் என ஏராளமான மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி கலந்து கொண்டனர். பேரணி வடசேரி வன அலுவலகத்தை சென்றடைந்ததும் உலக வனநாள் கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்கில் அரசு ரப்பர் கழக நிர்வாக இயக்குனர் ராகேஷ்குமார் டோக்ரா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

பெருமை கொள்ள வேண்டும்

இன்று உலக வனநாள் விழா கொண்டாடப்படுகிறது. பல்லுயிர் பெருக்கம், நீர் சுழற்சியில் காடுகளின் பங்கு அளப்பறியது. குமரி மாவட்ட மொத்த பரப்பளவில் 60 சதவீத பங்கு காடுகளால் சூழப்பட்டுள்ளது. நமது நாட்டில் 8 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் அளவிற்கு வனப்பகுதிகள் உள்ளதாக வனம் பற்றிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த 10 முதல் 20 ஆண்டுகளில் தமிழகத்தின் வன பரப்பளவு அதிகரித்துள்ளது. இதற்காக நாம் பெருமை கொள்ள வேண்டும்.

இவ்வாறு ராகேஷ்குமார் டோக்ரா கூறினார்.

ஒத்துழைப்பு

மாவட்ட வனத்துறை அதிகாரி விஸ்மிஜூ விஸ்வநாதன் தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-

வெளி மாவட்டங்களில் உள்ளவர்கள் குமரி மாவட்டத்துக்கு வந்து வனங்களை பார்த்துச் செல்கின்றனர். ஆனால் நம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதன் முக்கியத்துவம் தெரிவதில்லை. வனங்களை பாதுகாப்பதற்கு வனத்துறையுடன் இணைந்து பணியாற்ற மாணவர்களும், பொதுமக்களும் முன்வரவேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் குமரி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவுக்கு நிலத்தடிநீர் மட்டமும், அணைகளில் நீரும் குறைந்து வறட்சி நிலவியது.

இதுபோன்ற சூழல் இனி வராமல் தடுப்பதோடு, தற்போது இருக்கும் வனத்தை அழித்து விடக்கூடாது. எதிர்கால சந்ததியினர் இழந்த வனங்களை மீட்டெடுப்பதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இவ்வாறு விஸ்மிஜூ விஸ்வநாதன் கூறினார்.

முன்னதாக நடந்த பேரணியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரி இயக்குனர் அருள்ஜோதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்