சேலம் அருகே பெண்களை வசியம் செய்து மயக்கி பாலியல் தொல்லை ஜோதிடர் கைது

சேலம் அருகே ஜோதிடம் பார்க்க வரும் பெண்களை வசியம் செய்து மயக்கி பாலியல் தொல்லை கொடுத்த ஜோதிடரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-03-21 22:00 GMT
தாரமங்கலம், 

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள கே.ஆர்.தோப்பூர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 35). இவர் கடந்த 15 ஆண்டுகளாக அந்த பகுதியில் ஜோதிடம் பார்த்து வருகிறார். மேலும் வசியம் செய்யும் வேலையிலும் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு குமாரபாளையத்தை சேர்ந்த திருமணம் ஆகாத இளம்பெண், தனது பெற்றோருடன் பன்னீர்செல்வத்திடம் ஜோதிடம் பார்க்க சென்றார்.

அப்போது, அந்த இளம்பெண்ணின் பெற்றோரிடம், உங்களது மகளின் ஜாதகத்தில் தோஷம் உள்ளது. அதை நிவர்த்தி செய்ய உங்களது மகளுக்கு தனி அறையில் சிறப்பு பூஜை செய்ய வேண்டும், நீங்கள் வெளியே காத்திருங்கள் என்று தெரிவித்துள்ளார். உடனே அவரது பெற்றோர் வெளியே சென்றதும், அந்த இளம்பெண்ணை அவர் தனி அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அந்த இளம்பெண்ணை பன்னீர்செல்வம் வசியம் செய்து மயக்க நிலைக்கு கொண்டு சென்றதாக தெரிகிறது.

பின்னர் அந்த பெண்ணுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மயக்க நிலையில் இருந்ததால் அந்த பெண்ணால் எதுவும் செய்ய முடியவில்லை. பின்னர் மயக்கம் தெளிந்த அந்த பெண் வெளியே வந்து, நடந்ததை தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் பன்னீர்செல்வத்திடம் தகராறு செய்தனர். ஆனால், இந்த சம்பவத்தை வெளியே சொல்ல முடியாததால், அவர்கள் தங்களது ஊருக்கு திரும்பி சென்று விட்டனர்.

இந்த நிலையில் கே.ஆர்.தோப்பூர் அருகே உள்ள கோட்டமேடு பகுதியை சேர்ந்த ஒரு பெண் தனது கணவருடன், அங்கு சென்றுள்ளார். அவரிடமும் தோஷம் கழிப்பதாக கூறி, பன்னீர்செல்வம் தனி அறைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணின் கையை பிடித்துக்கொண்டு, ‘நீங்கள் மிக அழகாக இருக்கிறீர்கள், நான் சொல்வதை கேட்டால் வசதியாக வாழலாம்’ என பன்னீர்செல்வம் ஆசைவார்த்தை கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உடனடியாக, கையை உதறிவிட்டு, வெளியே ஓடி வந்து நடந்ததை தனது கணவரிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர்கள் தாரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருள்வடிவழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பன்னீர்செல்வத்தை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல ஆண்டுகளாக தன்னிடம் ஜோதிடம் பார்க்க வரும் பெண்களுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

மேலும் ஜோதிடர் பன்னீர்செல்வம் 100-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பரிகாரம் செய்ய வேண்டும் என்றுக்கூறி அவர்களை தனியாக அழைத்து சென்று சில்மிஷத்திலும் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து பன்னீர்செல்வத்தை போலீசார் ஓமலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்