பெரியார் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து மன்னர் சரபோஜி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

பெரியார் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-03-21 23:00 GMT
தஞ்சாவூர்,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே விடுதியில் இருந்த பெரியார் சிலை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது. இதை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.க.வினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தஞ்சையில் நேற்று முன்தினம் திராவிடர் கழகத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் நேற்று கல்லூரி முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். திராவிட மாணவர் கழக ஒருங்கிணைப்பாளர் அறிவேந்தன் தலைமை தாங்கினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரியார் சிலையை உடைத்து சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். மதவாதசக்தியை தூண்டுபவர்களை தமிழகத்தில் இருந்து விரட்டியடிக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

போக்குவரத்து பாதிப்பு

மாணவர்களின் இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதன்பின்னர் போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்