கள்ளக்குறிச்சி வாரச்சந்தையில் ரூ.1½ கோடிக்கு பருத்தி விற்பனை
கள்ளக்குறிச்சி வாரச்சந்தையில் ரூ.1½ கோடிக்கு பருத்தி விற்பனையானது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சியில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் அமைந்துள்ளது. இங்கு புதன்கிழமைதோறும் பருத்தி வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த பருத்தி வாரச்சந்தைக்கு கள்ளக்குறிச்சி, கச்சிராயப்பாளையம், சங்கராபுரம் மற்றும் கடலூர் மாவட்டம் வேப்பூர், அடரி, சிறுபாக்கம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் அறுவடை செய்த பருத்தியை கொண்டு வந்து விற்பனை செய்து விட்டு செல்வார்கள்.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற வாரச்சந்தைக்கு பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் 8 ஆயிரத்து 700 பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.
அவற்றில் ஒரு குவிண்டால் எல்.ஆர்.ஏ. ரக பருத்தி அதிகபட்சமாக 5 ஆயிரத்து 470 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 4 ஆயிரத்து 910 ரூபாய்க்கும் விற்பனையானது. இதேபோல் ஒரு குவிண்டால் சுவின் ரகம் 6 ஆயிரத்து 610 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 5 ஆயிரத்து 750 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த பருத்தி மூட்டைகளை விழுப்புரம், திருப்பூர், சத்தியமங்கலம், அன்னூர், புஞ்சைபுளியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் நேரில் வந்து மொத்தமாக கொள்முதல் செய்து சென்றனர்.
நேற்று நடந்த வாரச்சந்தையில் மொத்தம் ரூ.1 கோடியே 50 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானதாக வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் பாண்டியன் தெரிவித்தார்.