பறக்கை மதுசூதனப்பெருமாள் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

பறக்கை மதுசூதனப்பெருமாள் கோவில் பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2018-03-21 22:45 GMT
சுசீந்திரம்,

குமரியின் குருவாயூராகவும் தங்க கொடிமரம் உடைய கோவிலாகவும் திகழும் பறக்கை மதுசூதனப்பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. காலை 8 மணிக்கு கொடிப்பட்டம் மேளதாளத்துடன் நான்கு ரதவீதிகள் வழியே ஊர்வலமாக கொண்டு சென்று மீண்டும் கோவிலுக்குள் கொண்டு வரப்பட்டு கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது.  

அதாவது 10.15 மணிக்கு மாத்தூர் மடம் தந்திரி சங்கரநாராயணரு தலைமையில் கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடிபீடத்திற்கு சிறப்பு பூஜைகளும், அலங்கார தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. இதில் குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, பறக்கை கூட்டுறவு சங்க தலைவர் சிதம்பரம், திருக்கோவில் பணியாளர்கள், மதுசூதனப்பெருமாள் சேவா சங்கத்தினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தேரோட்டம்

அதனை தொடர்ந்து தேர்களுக்கு கால்நாட்டு விழா நடந்தது. திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, அலங்கார தீபாராதனை நடக்கிறது. 5–ம் திருவிழாவான 25–ந் தேதி இரவு 7 மணிக்கு கருடனுக்கு கண் திறந்து பெருமாள் காட்சியருளல் நிகழ்ச்சியும், 9–ம் திருவிழாவான 29–ந் தேதி காலை 9.00 மணிக்கு மேல் தேரோட்ட நிகழ்ச்சியும், நண்பகல் 12 மணிக்கு அன்னதானமும், இரவு 9 மணிக்கு சப்தாவர்ணமும் நடக்கிறது.

10–ம் திருவிழாவான 30–ந் தேதி பிற்பகல் 3 மணிக்கு வெள்ளி கருட வாகனத்தில் ஆறாட்டு துறைக்கு சுவாமி எழுந்தருளலும், இரவு 11 மணிக்கு தெப்பத்திருவிழாவும் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகமும், மதுசூதனப்பெருமாள் சேவா சங்கத்தினரும் இணைந்து செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்