சுரண்டை அருகே ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை

சுரண்டை அருகே ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-03-21 20:30 GMT
சுரண்டை,

சுரண்டை அருகே ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆசிரியை


நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பரம்குன்றாபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). இவருடைய மனைவி விஜயா (31). இவர்கள் திருமணத்திற்கு பிறகு சென்னையில் வசித்து வந்தனர். சுரேஷ் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராகவும், விஜயா தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியையாகவும் பணியாற்றினர்.

கணவன்–மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜயாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் சுரேஷ் தனது குடும்பத்துடன் சொந்த ஊரான பரம்குன்றாபுரத்திற்கு வந்தார்.

தூக்கில் தொங்கினார்


சுரண்டை அருகே உள்ள சாம்பவர் வடகரையில் விஜயாவின் அக்காள் ஹெப்சி வீடு உள்ளது. இங்கு கடந்த ஒரு வாரமாக விஜயா தங்கி இருந்தார். இந்த நிலையில் கடந்த 19–ந் தேதி கணவன்–மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த விஜயா வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஹெப்சி சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர்.

அவர்கள் தூக்கில் தொங்கிய விஜயாவை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சாவு

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி விஜயா நேற்று பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து சாம்பவர் வடகரை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் மனோகரன் விசாரணை நடத்தி வருகிறார்.

கணவருடன் ஏற்பட்ட தகராறில் விஜயா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்ப பிரச்சினையில் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்