குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

Update: 2018-03-20 22:15 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, பஸ் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி, சாதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு மனுக்களை மாவட்ட கலெக்டர் பொன்னையா பெற்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் இந்த முகாமில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் 20 பயனாளிகளுக்கு சுய வேலை தொடங்க ரூ.14 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான காசோலையை மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வையாவூர், தர்மநாயக்கன்பட்டறையை சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி எம்.ஆகாஷ்க்கு ரூ.3 ஆயிரத்து 500 மதிப்பிலான சக்கர நாற்காலியை வழங்கினார்.

பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு வட்டங்களை சேர்ந்த இருளர் குடும்பத்தை சேர்ந்த 8 பயனாளிகளுக்கு தொழில் உதவிக்காக தலா ரூ.30 ஆயிரம் மானியம் வீதம் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான இருசக்கர வாகனங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சக்திவேல், ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி தமிழ்ச்செல்வி, மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் சக்திவேல் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்