ரத யாத்திரைக்கு எதிர்ப்பு: சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது

ராமராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியல் செய்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-03-20 23:00 GMT
மதுரை,

விசுவ இந்து பரிஷத் ஆதரவு பெற்ற அமைப்பு சார்பில் ராமராஜ்ய ரத யாத்திரை நேற்று தமிழக பகுதிக்கு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

தி.மு.க. சார்பில் நேற்று மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே கூடினார்கள். பின்னர் அவர்கள் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போட்டனர். திடீரென்று அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் தளபதி உள்பட தி.மு.க.வினர் 155 பேரை போலீசார் கைது செய்தனர்.

அதேபோன்று தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனித நேய மக்கள் கட்சியினர் சார்பில் பெரியார் பஸ் நிலையம் கட்டபொம்மன் சிலை அருகே மறியல் நடந்தது. மறியலில் ஈடுபட்ட 39 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்பேட்டை அண்ணாசிலை அருகே எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர். முனிச்சாலை, அவனியாபுரம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 33 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையில் நேற்று இரவு ரதயாத்திரை பெரியார் பஸ் நிலையம் அருகே வந்த போது மனித நேய முன்னேற்ற கட்சியினர் திடீரென்று ஆர்ப்பாட்டம் செய்து, மறியலுக்கு முயன்றனர். உடனே அங்கிருந்த போலீசார் அவர்கள் 15 பேரை கைது செய்தனர்.

இவ்வாறு ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக மதுரை நகரில் சுமார் 400-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்