3 மாதங்களாகியும் திறக்கப்படாத பெரும்பாக்கம் சிறுவர் பூங்கா

பெரும்பாக்கத்தில் ரூ.30 லட்சம் செலவில் கட்டப்பட்டு 3 மாதங்களாகியும் சிறுவர் பூங்கா திறக்கப்படாமல் உள்ளது. இதனை உடனே திறக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2018-03-20 22:30 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பிரபு நகரில் காலியாக இருந்த இடத்தில் சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து ஊராட்சி மன்றத்தின் சார்பில் ரூ.30 லட்சம் செலவில் சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்க தீர்மானிக்கப்பட்டது. மேலும் பூங்காவில் முதியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ள தனி நடைபாதையும், சிறுவர்கள் விளையாட ஊஞ்சல் போன்ற விளையாட்டு சாதனங்களும் அமைக்கப்பட்டன. அழகிய பூச்செடிகளும் வைக்கப்பட்டு உள்ளன.

இந்த பூங்கா அனைத்து வசதிகளுடன் கடந்த ஜனவரி மாதமே தயாராகி விட்டது. இதற்கு அம்மா பூங்கா என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. ஆனால் இந்த பூங்கா இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் உள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு பூங்கா திறக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் திறக்கப்படவில்லை.

கட்டி முடிக்கப்பட்டு 3 மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படாமல் பூங்கா பூட்டி கிடப்பதால் பூங்காவில் உள்ள பூச்செடிகளை உரிய முறையில் பராமரிக்காததால் அவை வாடி வருகின்றன. சிறுவர்களும் விளையாட பூங்கா இல்லாததால் வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. முதியவர்களும் அதிகாலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்ள மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

எனவே உடனடியாக பூங்காவை திறக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்