டிராக்டரில் சென்ற தொழிலாளி தவறி விழுந்து சாவு: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்

டிராக்டரில் சென்ற தொழிலாளி தவறி விழுந்து இறந்தார். அவருடைய உடலை வாங்க மறுத்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரி முன்பு உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-03-20 22:00 GMT
ஈரோடு,

ஈரோடு அருகே உள்ள கங்காபுரம் ஆயப்பாளி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 45). விவசாய கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி தங்கமணி. இவர்களுக்கு தாமரை செல்வி (21), சரண்யா (16) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். சுப்பிரமணி ஈரோடு எல்லப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் வைக்கோல் கட்டும் பணிக்கு நேற்று முன்தினம் சென்றார். அங்கு வேலை முடிந்தபிறகு இரவு அவர் வீட்டிற்கு புறப்பட்டார். இதைத்தொடர்ந்து அங்கிருந்து அவர் கனிராவுத்தர் குளம் பஸ் நிறுத்தம் வரை செல்வதற்காக டிராக்டரில் சென்றார். அந்த டிராக்டரை பெருமாள் என்பவர் ஓட்டினார். அவருக்கு அருகில் சுப்பிரமணி உட்கார்ந்து இருந்தார்.

ஈரோடு சின்னசேமூர் அரசு பள்ளிக்கூடம் அருகில் அந்த டிராக்டர் சென்றுகொண்டு இருந்தது. அப்போது அங்கிருந்த வேகத்தடையை டிரைவர் பெருமாள் கவனிக்கவில்லை. இதனால் வேகத்தடையில் டிராக்டர் வேகமாக ஏறி இறங்கியது. இதில் டிரைவருக்கு அருகில் உட்கார்ந்து இருந்த சுப்பிரமணி நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சுப்பிரமணியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுப்பிரமணி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார், விபத்தை ஏற்படுத்தியதாக டிராக்டர் டிரைவரான பெருமாள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் சுப்பிரமணியின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய பெருமாளை கைது செய்ய வேண்டும் என்றும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து ஈரோடு டவுன் போலீசார், உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

மாலை 3 மணிஅளவில் சுப்பிரமணியின் உறவினர்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி எதிரே திரண்டனர். அவர்கள் ஈ.வி.என்.ரோட்டில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், டிரைவர் பெருமாளை கைது செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்தபடி கோஷங்களை எழுப்பினார்கள்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் விஜயன், முருகையன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் போலீசாரின் பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்ளாத உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆண்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினார்கள். அப்போது பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று உறுதியாக இருந்தனர். மேலும், வேனில் இருந்தவர்களும் வெளியேறி மீண்டும் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான நிலை நிலவியது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்றனர். ஆனால் கைதாக முடியாது என்று உறவினர்களும் சாலையில் படுத்துக்கொண்டனர். அதன்பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று வேனில் ஏற்றினார்கள்.

அவர்கள் ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து போலீசார் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து, பெண்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இந்த போராட்டத்தினால் அந்த பகுதியில் சுமார் 1½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈ.வி.என்.ரோடு வழியாக சென்ற அனைத்து பஸ்களும் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.

விபத்தில் இறந்த சுப்பிரமணியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்