திருப்பூரில் பரபரப்பு குடிபோதையில் மின் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய ஊழியர்
பணி நிரந்தரம் செய்யக்கோரி குடிபோதையில் உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய ஊழியரால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்,
திருப்பூர் செட்டிபாளையம் தாராபுரம் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 49). இவர் பிரிட்ஜ் வே காலனியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக கடந்த 19 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். ராஜகோபால் தன்னை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்துள்ளார். ஆனால் அவர் இன்னும் பணி நிரந்தம் செய்யப்படாமல் இருந்து வருவதாக தெரிகிறது. இந்தநிலையில் விரக்தியடைந்த ராஜகோபால் குடிபோதையில் திருப்பூர் எஸ்.வி. காலனி மெயின்ரோட்டில் உள்ள சுமார் 70 அடி உயரம் கொண்ட உயர் அழுத்த மின் கோபுரத்தின் மீது நேற்று மாலை ஏறத் தொடங்கினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் மின் வாரிய ஊழியர் பராமரிப்பு பணி மேற்கொள்ள கோபுரத்தில் ஏறியதாக நினைத்து கொண்டிருந்தனர். ஆனால் கோபுரத்தின் உச்சியில் ஏறிய ராஜகோபால் திடீரென தன்னை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனை பார்த்ததும் அந்த பகுதியில் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் குணசேகரன் மற்றும் பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.அதன் பேரில் திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலைய வீரர்கள், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையா மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட ராஜகோபாலிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 45 நிமிட போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் உயர் மின் அழுத்த கோபுரம் மீது ஏற முயன்றனர்.
உடனே ராஜகோபால் மேல் இருந்து கீழே இறங்கி வந்தார். தொடர்ந்து வடக்கு போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை பார்க்க அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.