ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியல்: தி.மு.க. உள்பட பல்வேறு கட்சியை சேர்ந்த 602 பேர் கைது

ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்டம் முழுவதும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. உள்பட பல்வேறு கட்சியை சேர்ந்த 602 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Update: 2018-03-20 22:00 GMT
திருப்பூர், 

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி ராம ராஜ்ய ரத யாத்திரை நேற்று கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருப்பூரில் பெரியார், அண்ணா சிலை முன்பு சாலைமறியல் போராட்டம் நேற்று மதியம் 1 மணிக்கு நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட தலைவர் க.செல்வராஜ் தலைமை தாங்கினார். தொ.மு.ச. மாநில துணை செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, இளைஞரணி அமைப்பாளர்கள் தங்கராஜ், செந்தில்குமார், பகுதி செயலாளர் ராமதாஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 48 பேரை திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி திருப்பூர் நடராஜா தியேட்டர் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதுபோல் ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த சென்ற மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருப்பூர் புஷ்பா தியேட்டர் ரவுண்டானா சந்திப்பு பகுதியில் நேற்று காலை மனித நேய மக்கள் கட்சி, த.மு.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்துக்கு மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் ஹாலிதீன் தலைமை தாங்கினார். த.மு.மு.க. மாவட்ட செயலாளர் பைசல் ரகுமான் முன்னிலை வகித்தார். இதில் மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் அஸ்கர் அலி, துணை செயலாளர் சித்திக், பொருளாளர் முத்து மீரான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பழ.சண்முகம், ஆதித்தமிழர் பேரவை சார்பில் சோழன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட 111 பேரை திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்து காலேஜ் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் காங்கேயம் ரோடு ராஜிவ்நகர் கார்னரில் மறியல் நேற்று நடந்தது. மறியல் போராட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் அபுதாகீர் தலைமை தாங்கினார். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் ஹபிபுர் ரகுமான், மாவட்ட செயலாளர் ஜாபர் சாதிக் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து திருப்பூர் தெற்கு போலீசார் மறியலில் ஈடுபட்ட 52 பேரை கைது செய்து அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

திருப்பூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே குமரன் ரோட்டில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் மறியல் போராட்டம் நேற்று மதியம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் சதகத்துல்லா தலைமை தாங்கினார். மறியலில் ஈடுபட்ட 9 பேரை வடக்கு போலீசார் கைது செய்தனர்.

இதுபோல் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே நேற்று மாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டதை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் 40-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாநகரில் 8 இடங்களில் நடந்த சாலைமறியல் போராட்டத்தில் மொத்தம் 350 பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்டத்தில் 10 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க., த.மு.மு.க. உள்பட 252 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் அனைவரையும் விடுதலை செய்தனர்.

மேலும் செய்திகள்