செயற்கை நுண்ணறிவு கருவிகளுக்கு இயல்பறிவு பயிற்சி
புத்திக்கூர்மை கொண்ட ஆனால் சம்பளமில்லாத வேலை ஆட்கள்தான் சமீபத்திய புதுவரவான செயற்கை நுண்ணறிவு கருவிகள்.
மனிதர்கள் தங்களுடைய தினசரி வேலைகளையும், விவசாயம் உள்ளிட்ட கடுமையான பல வேலைகளையும் செய்ய சக மனிதர்களை அடிமைப்படுத்தி பயன்படுத்திக்கொண்ட காலம் மலையேறிவிட்டது. நாம் தற்போது எந்திர காலத்தில் வாழ்கிறோம். இப்போது எந்திரங்கள்தான் நம் கூலித்தொழிலாளிகள்.
நம் தினசரி வேலைகளை, ஏவல்களை மற்றும் நம்மால் செய்ய முடியாத மிகக் கடினமான வேலைகளை நமக்காக பொறுப்பாக செவ்வனே செய்து முடிக்கும், புத்திக்கூர்மை கொண்ட ஆனால் சம்பளமில்லாத வேலை ஆட்கள்தான் சமீபத்திய புதுவரவான செயற்கை நுண்ணறிவு கருவிகள்.
தொழிற்சாலைகளில் ஆபத்தான வேலைகளை மிகச் சுலபமாகவும், விரைவாகவும் செய்துமுடிப்பது தொடங்கி, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றம் ஏற்பட்ட இடங்களில் இடர்பாடுகளில் சிக்கிய மனிதர்களை விரைவில் காப்பாற்றுவது போன்ற உடல் வலிமை மற்றும் ஆபத்து சார்ந்த வேலைகள் முதல் புத்திக்கூர்மை சார்ந்த சதுரங்க விளையாட்டு, நமது ஆடு புலி ஆட்டம் போன்ற சீன விளையாட்டான கோ (Go) விளையாட்டு மற்றும் உலகின் பிரபலமான அறிவியல் கேள்வி பதில் விளையாட்டான ஜெப்பர்டி (Jeopardy) ஆகியவை அனைத்திலும் உலகின் தலைசிறந்த வீரர்களை சப்பையாக தோற்கடிப்பது வரை ஐ.பி.எம் நிறுவனத்தின் டீப் புளூ (Deep Blue), வாட்சன் (Watson) மற்றும் கூகுள் நிறுவனத்தின் ஆல்பா கோ (AlphaGo) ஆகிய செயற்கை நுண்ணறிவு கருவிகள் பிச்சு உதறி உலக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றன.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இவ்வளவு அதிநவீன மான செயற்கை நுண்ணறிவு கருவிகளுக்கு ‘காமன் சென்ஸ்’ என்று சொல்லப்படும் ‘இயல்பறிவு’ சுத்தமாக கிடையாது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? உண்மைதான். இதுவரை உருவாக்கப்பட்ட எந்த செயற்கை நுண்ணறிவு கருவிகள் அல்லது ரோபாட்டுக்கும் ‘காமன் சென்ஸ்’ என்பதும் துளியும் கிடையாது. அதை உருவாக்க முயன்ற விஞ்ஞானிகள் தோற்றுத்தான் போயிருக்கிறார்கள்.
உதாரணமாக, நம் கைகளில் ஐந்து விரல்கள் இருக்கின்றன, நம் வீட்டு கதவு வழியாக ஒரு யானையால் உள்ளே நுழைய முடியாது, சூரியனுக்கு மிக அருகில் போனால் அதன் வெப்பத்தில் நாம் பொசுங்கி விடுவோம் உள்ளிட்ட பொதுப்புத்தி அல்லது அடிப்படை புரிதல் கணக்கில் புலியாக விளங்கக்கூடிய ரோபாட்டுகளுக்கு, செயற்கை நுண்ணறிவு கருவிகளுக்கு கிடையாது என்பதே உண்மை.
காமன் சென்ஸை புரிந்துகொள்வது சுலபம். ஆனால் அதை விளக்கிக் கூறவது மிகக் கடினம். அப்படியானால், செயற்கை நுண்ணறிவு கருவிகளுக்கு காமன் சென்ஸை எப்படி சொல்லிக் கொடுப்பது?
அதற்காகத்தான் சுமார் 125 மில்லியன் டாலர் (சுமார் 600 கோடி ரூபாய்) நிதி ஒதுக்கி ப்ராஜெக்ட் அலெக்சாண்ட்ரியா (Project Alexandria) எனும் ஒரு ஆய்வுத்திட்டத்தை உருவாக்கியிருக்கிறார் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன்.
ஆலன் இன்ஸ்டிடியூட் பார் ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் (Allen Institute for Artificial Intelligence (AI2) எனும் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் ஒரு பகுதியான இந்த ‘அலெக்சாண்ட்ரியா திட்டம்’ ரோபாட்டுகளுக்கு காமன் சென்ஸ் அல்லது இயல்பறிவை விரைவில் கற்றுத்தரவிருக்கிறது என்கிறார் ஆலன்.
பத்து வயது குழந்தைகளுக்கு இருக்கக்கூடிய இயல்பறிவு செயற்கை நுண்ணறிவு கருவிகளுக்கும் வந்துவிட்டால், மனிதர்கள் தினசரி மேற்கொள்ளும் வேலைகளான ஒரு பொருள் எங்கிருக்கிறது என்று கண்டறிந்து எடுப்பது, வீடுகளை விற்பது, உயரமான இடத்துக்கு ஏறிச்செல்வது, இயற்கை சீற்ற இடர் பாடுகளில் சிக்கியவர்களை மீட்பது உள்ளிட்ட மேலும் பல வேலைகளை அவை இயல்பாக மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக, சக மனிதர்களுடன் சேர்ந்து செயல்படக்கூடிய செயற்கை நுண்ணறிவு கருவிகள் அவர்களை காயப்படுத்தவோ, உயிருக்கு சேதம் விளைவிக்கவோ கூடாது என்றால் அவற்றுக்கு காமன் சென்ஸ் மிகவும் அவசியம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
கடந்த 2016-ம் ஆண்டு உலகின் தலைசிறந்த கோ விளையாட்டு வீரரை சுலபமாக வீழ்த்திய ஆல்பா கோ கருவிக்கு கோ என்பது ஒரு பலகை விளையாட்டு (board game) என்பதே தெரியாது என்றால் அதன் காமன் சென்ஸ் எவ்வளவு என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
முக்கியமாக, ப்ராஜெக்ட் அலெக்சாண்ட்ரியா திட்ட மானது, எந்திர பகுத்தறிதல் ஆய்வு மற்றும் படங்கள் மற்றும் காணொளிகள் வழியாக கற்கும் கம்ப்யூட்டரின் திறன் (machine reasoning and computer vision) ஆகியவற்றுடன் சேர்த்து பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்படும் இயல்பறிவு சார்ந்த புரிதல்களின் தொகுப்பு ஆகிய அனைத்தையும் ஒன்று சேர்த்து செயற்கை நுண்ணறிவு கருவிகள் மற்றும் ரோபாட்டு களுக்கு காமன் சென்ஸ் அறிவை புகட்டத் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.