ஐ.ஏ.எஸ். நேர்காணலை எதிர்கொள்ளும் முன்பு...
சிவில் சர்வீஸ் நேர்காணலில் கொஞ்சம் பதற்றம் ஏற்படுவது இயல்புதான். இருந்தாலும் நல்ல பயிற்சியின் மூலம் நேர்காணலில் வெற்றி பெற முடியும்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகள் தேர்வு (சிவில் சர்வீஸ் தேர்வு) இரண்டு நிலைகளைக் கொண்டது. பிரிலிமினரி தேர்வு எனப்படும் முதல்நிலைத் தேர்வு மற்றும் மெயின் தேர்வு எனப்படும் முதன்மைத் தேர்வு, இரண்டாவதாக இன்டர்வியூ எனப்படும் நேர்காணல்.
எழுத்துத் தேர்வின் முதல் நிலையான பிரிலிமினரி தேர்வில், ஒரு கேள்விக்கு நான்கு விடைகள் கொடுத்து சரியானதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது போன்ற ஆப்ஜெக்டிவ் டைப் வினாக்கள் கேட்கப்படும். முதன்மைத் தேர்வு எனப்படும் மெயின்தேர்வு பட்டப்படிப்பு மற்றும் முதுகலை பட்டப் படிப்பிற்கு இணையாக இருக்கும். விருப்பப் பாடத்தை தேர்வு செய்து கொள்ளலாம். தொடர் பயிற்சிகள் மற்றும் கடின உழைப்பின் மூலம் இந்தத் தேர்வில் வெற்றி பெற்றுவிடலாம்.
இறுதியாக முக்கியத் தேர்வான நேர்காணல் நடத்தப்படுகிறது. இதற்கு 300 மதிப்பெண்கள். நேர்முகத் தேர்வு சவால் நிறைந்தது என்ற தயக்கம் பெரும்பாலானவர்களிடம் காணப்படுகிறது. பணிக்கான நேர்காணல்போல அல்லாமல், சமூகப்பண்பு, மேலாண்மைத் திறன், மதிநுட்பம் அனைத்தையும் மதிப்பிடும் நேர்காணலாக, சிவில் சர்வீஸ் நேர்காணல் இருப்பதால் கொஞ்சம் பதற்றம் ஏற்படுவது இயல்புதான். இருந்தாலும் நல்ல பயிற்சியின் மூலம் நேர்காணலில் வெற்றி பெற முடியும்.
ஐ.ஏ.எஸ். நேர்காணலை எதிர்கொள்ள உதவும் சில டிப்ஸ் இங்கே...
* உங்கள் அறிவுத் திறனை மதிப்பிடத்தான் நேர்முகத் தேர்வு என்று நினைக்கக் கூடாது. உங்கள் சமூகப் பண்புகள், மேலாண்மைத் திறன், நடப்பு நிகழ்வுகளைத் தெரிந்து கொள்வதில் ஈடுபாடு ஆகியவை நேர்காணலில் மதிப்பிடப்படும். சுருக்கமாக சொல்வதென்றால் தலைமை நிர்வாக பணிக்கு நீங்கள் ஏற்புடையவரா? என்பதை மதிப்பீடு செய்கிறது நேர்காணல். தலைமைப் பண்பு, சமநிலைத் தேர்வு, நாணயம் போன்றவையும் கேள்விகள் மூலம் மதிப்பிடப்படும்.
* நேர்காணலை எதிர்கொள்ள எண்ணத்தைத் தெளிவாக வெளிப்படுத்துதல்; விவாதங்களைப் புரிந்து கொள்ளும் திறமை; பகுத்தறிவு; சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு; மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் தன்மை; ஆளுமைத் திறனை வளர்த்தல் போன்ற பண்புகள் அவசியம்.
* நேர்முகக் காணலில் எது தொடர்பாக கேள்வி கேட்பார்கள்? என்று எதுவும் வரைமுறை ஏதுமில்லை. உங்கள் பெயரிலிருந்து, ஊர் பெயரில் இருந்து, விருப்பமான ஏதாவது ஒன்றிலிருந்து கேள்வி தொடங்கலாம். உதாரணமாக உங்கள் பெயர் ஏதாவது பிரபலத்தின் பெயரை ஒத்திருக்கிறதா? அப்படியானால் அந்தப் பிரபலத்தைப் பற்றிய விவரங்களை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? என்று சோதிக்கப்படலாம்.
* சமீபத்திய பரபரப்பு செய்திகள், சமூக பிரச்சினைகள் பற்றிய கேள்விகள், உங்கள் பொழுதுபோக்குகள் தொடர்பான வினாக்கள், உங்கள் லட்சியம், ஏன் ஆட்சிப் பணிக்கு செல்ல வேண்டும் என்பதுபோன்ற கேள்விகள் இடம்பெறலாம்.
* உங்கள் மாவட்டம், மாநிலம் தொடர்பான கேள்விகள், படித்த கல்வி நிறுவனம் குறித்து கேள்விகளும் இடம் பெற வாய்ப்பு உண்டு. எனவே இவை பற்றிய விரிவான விவரங்களை சேகரித்து, மனதில் பதிய வைத்திருப்பது நல்லது.
* முதன்மைத் தேர்வில் விருப்பமொழியை தேர்வு செய்ய முடியும். அதேபோல நேர்முகத் தேர்விலும் நாம் தமிழ் மொழியில் பதில் அளிக்கலாம். ஆங்கிலத்தில் கேட்கப்படும் வினாக் களையும் நாம் தமிழில் கூறும் பதில்களையும் மொழிபெயர்த்துச் சொல்வதற்கு ஒரு மொழிபெயர்ப்பாளர் இருப்பார். அதில் பிழைகள் ஏற்படலாம். எனவே நேர்முகத் தேர்வை ஆங்கிலத்தில் எதிர்கொள்வதே சிறப்பு.
* நீங்கள் சொல்லும் பதில்கள் வார்த்தைகளில் மட்டுமல்ல, சரியான உடல் மொழியிலும் வெளிப்பட வேண்டும். நேர் முகத் தேர்வை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள். வென்றுவிடலாம்.
* இதற்காக நீண்ட கால திட்டமும், முயற்சியும் அவசியமாகும். முக்கியமாக பள்ளிப் படிப்பு முடிந்தவுடனே குடிமைப் பணிகளை இலக்காக வைத்து, தேர்வுக்குத் தயாராவது நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள உதவியாக இருக்கும். முதல்நிலைத் தேர்வு முடிந்தபிறகு, அதன் முடிவுகள் வெளியான பிறகு முதன்மைத் தேர்வுக்குத் தயாராகுதல், அது முடிந்ததும் நேர்காணலுக்கு தயாராகலாம் என காத்திருப்பது சரியான முடிவல்ல. இடையிலுள்ள ஒவ்வொரு நாளும் இதே லட்சியமாகக் கொண்டு செயல்பட்டால்தான் தேர்வு எளிமையாக இருக்கும்.
* பட்டப் படிப்பாக எந்தப் பாடத்தை எடுத்தீர்களோ, அதையே விருப்பப் பாடமாக எடுத்துக் கொள்வது நல்லது. இது முதன்மைத் தேர்வுக்கும், நேர்காணலுக்கும் பெரிய அளவில் கைகொடுக்கும்.
* தேர்வுக்கு இரண்டாண்டு காலம் முழுமையாகத் தயார் செய்வது நல்லது. குறைந்தபட்சம் ஓராண்டாவது முழுப் பயிற்சி பெற்றுவிட்டு பின்னர் வேலை பார்த்துக் கொண்டே தயாராக முடியும். நேரடியாக வேலை பார்த்துக் கொண்டே தேர்வுக்கு தயாராவது சுலபமான காரியமல்ல. அதேபோல் ஒவ்வொரு தேர்வு எழுதி முடித்தபிறகு, அதன் முடிவு வெளியாகும் வரை காத்துக் கொண்டிருக்காமல் அப்போதிலிருந்தே நேர்முகத் தேர்வுக்குத் தயார் செய்து கொள்ள வேண்டும்.
* பயிற்சி மையங்களின் உதவியுடன் ஒவ்வொரு தேர்வுக்கும் மாதிரித் தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள். நேர்காணலுக்கும் ஒத்திகை அவசியமே. திட்டமிட்ட தயாரிப்பு தந்திடுமே வெற்றி!