கவுந்தப்பாடி தீக்குளித்து தாய் தற்கொலை காப்பாற்ற முயன்ற 2 மகள்களும் உடல் கருகி சாவு

கவுந்தப்பாடி அருகே தீக்குளித்து தாய் தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவரை காப்பற்ற முயன்ற 2 மகள்களும் உடல் கருகி இறந்தனர்.

Update: 2018-03-19 22:00 GMT
கவுந்தப்பாடி, 

கவுந்தப்பாடி பெரியபுலியூர் அருகே உள்ள வடக்கு தயிர்பாளையம் ஸ்ரீநகரை சேர்ந்தவர் ராஜா. விவசாயி. அவருடைய மனைவி ஜெயமணி (வயது 43). இவர்களுடைய மகள்கள் தனுஷியா (18), பவித்ரா (12). இதில் தனுஷியா ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். பவித்ரா சித்தோடு அருகே உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள்.

ராஜாவின் தோட்டம் ஊர் அருகில் உள்ளது. தோட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அங்கு குவித்து வைக்கப்பட்டு இருந்தன. எனவே ராஜா நேற்று முன்தினம் இரவு தோட்டத்துக்கு காவலுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். வீட்டில் ஜெயமணியும், 2 மகள்களும் இருந்தார்கள்.

இந்த நிலையில் நேற்று காலை தோட்டத்தில் இருந்தபடி செல்போனில் ஜெயமணியை ராஜா தொடர்பு கொண்டார். ஆனால் செல்போனை யாரும் எடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து ராஜா வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டி கிடந்தது.

மேலும் வீட்டின் குளியலறையில் இருந்து கரும்புகை வந்து கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் வீட்டின் கதவை ஓங்கி அடித்தார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது குளியலறையில் ஜெயமணி, தனுஷியா, பவித்ரா ஆகியோர் உடல் கருகி இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து ஓவென்று சத்தம் போட்டு கதறி அழுதார். மேலும் வீட்டின் படுக்கை அறையில் இருந்த மெத்தை மற்றும் துணிகள் எரிந்து கொண்டிருந்தது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் செல்வம் (கோபி), சார்லஸ் (பவானி) மற்றும் கவுந்தப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்தவர்களின் உடலை பார்வையிட்டனர்.

பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், ‘நேற்று காலை 6 மணி அளவில் படுக்கை அறையில் இருந்த ஜெயமணி தற்கொலை செய்துகொள்வதற்காக தன்னுடைய உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீயை பற்ற வைத்து உள்ளார். உடலில் தீப்பற்றியதும் வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்துள்ளார். மேலும் தீ அருகில் இருந்த மெத்தையிலும் பிடிக்க தொடங்கியது.

ஜெயமணியின் சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து விழித்து எழுந்த தனுஷியாவும், பவித்ராவும் சத்தம் போட்டு அலறியபடி அவரை காப்பாற்ற முயன்றனர். அப்போது அவர்களுடைய உடலிலும் தீப்பற்றியது. இதனால் 3 பேரும் வீட்டில் இருந்த குளியலறைக்கு ஓடிச்சென்று தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர். ஆனால் குளியலறைக்கு சென்ற ஜெயமணி அங்கேயே விழுந்து பரிதாபமாக இறந்தார்.

அவருக்கு அருகில் தனுஷியாவும், பவித்ராவும் உடல் கருகி விழுந்தனர். மேலும் வீட்டின் அனைத்து கதவுகள் அடைக்கப்பட்டிருந்ததாலும், மெத்தை மற்றும் பல பொருட்கள் தீப்பற்றி எரிந்ததாலும் வீடு முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்து விட்டது. சூழ்ந்த புகைமூட்டம் வெளியே செல்ல வழி இல்லாததால் உடல் கருகி விழுந்த தனுஷியாவும், பவித்ராவும் மூச்சுத்திணறி இறந்து உள்ளனர்.

மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.

இதற்கிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டில் உள்ள மெத்தை மற்றும் பொருட்களில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சியடித்து அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் ராஜாவின் வீட்டின் முன் அவருடைய உறவினர்கள் ஏராளமானோர் கூடிவிட்டனர். அவர்கள் இறந்த 3 பேரின் உடல்களை பார்த்து கதறி அழுதனர். இதைத்தொடர்ந்து 3 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குடும்பத்தகராறு காரணமாக ஜெயமணி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதுமட்டுமின்றி ஈரோட்டில் இருந்து தடயவியல் நிபுணர்கள், கை ரேகை நிபுணர்கள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கிருந்த தடயங்கள் மற்றும் ரேகைகளை பதிவு செய்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து கோபி ஆர்.டி.ஓ. கோவிந்தராஜும் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதும், காப்பாற்ற முயன்ற 2 மகள்கள் உடல் கருகி இறந்ததும் வடக்கு தயிர்பாளையம் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியது.

மேலும் செய்திகள்