கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு மனுக்களை மாலைபோல் அணிந்து வந்த விவசாயி
தேவனூர் ஏரி மதகை சீரமைக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்திற்கு விவசாயி ஒருவர் தனது கழுத்தில் கோரிக்கை மனுக்களை மாலைபோல் அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். இதில் கலெக்டரை சந்தித்து மனு கொடுப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்திருந்தனர்.
இந்த நிலையில் மேல்மலையனூர் தாலுகா தேவனூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்ற விவசாயி, கோரிக்கை மனுக்களை ஒரு நூலில் கட்டிக்கொண்டு அதனை தனது கழுத்தில் மாலைபோல் அணிந்துகொண்டு வந்தார்.
இதனை பார்த்ததும் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று சக்திவேலை தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரணை செய்தனர். பின்னர் அவர் மாலைபோல் அணிந்து வந்த கோரிக்கை மனுக்களை கழற்றி வரிசையாக அடுக்கி வைத்துவிட்டு கலெக்டரை சந்திக்க அனுமதித்தனர்.
அப்போது கலெக்டர் சுப்பிரமணியனிடம் சக்திவேல் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், தேவனூர் பெரிய ஏரியின் மதகு 10 ஆண்டுகளுக்கு முன்பு உடைந்தது. அதனை இன்னும் சரிசெய்யவில்லை. அதுபோல் பாசன வாய்க்கால்களும் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனால் ஏரியில் தண்ணீர் இருந்தும் உபயோகப்படுத்த முடியாத நிலை உள்ளது.
எனவே ஏரி மதகை சீரமைப்பதோடு பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே இனி கோடை காலம் என்பதால் விவசாய பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு ஏதுவாக உடனடியாக ஏரி மதகை சீரமைப்பதோடு பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பையும் அகற்றுவதற்கு கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மனுவை பெற்ற கலெக்டர் சுப்பிரமணியன், இதுகுறித்து பரிசீலனை செய்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
கலெக்டர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனுக்களை மாலைபோல் அணிந்து வந்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.