சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் வந்த பெண்களால் பரபரப்பு
சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் வந்த பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ரோகிணி தலைமையில் நடந்தது. மேட்டூர் தாலுகா தோரமங்கலம் கிராமம் அருணாசல நகரை சேர்ந்த பெண்கள் பலர் கலெக்டர் அலுவலகத்துக்கு குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களில் சிலரை மட்டும் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க போலீசார் அனுமதித்தனர்.
எங்கள் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆனால் இதுவரை இங்கு எந்தவித குடிநீர் வசதியும் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் குடிநீருக்காக 2 கிலோ மீட்டர் தூரம் வரை செல்ல வேண்டிய நிலை உள்ளது. குடிநீர் கேட்டு நங்கவள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி எங்கள் பகுதிக்கு விரைவில் குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர்கள் கூறி உள்ளனர்.