தேவகோட்டையில் நகை-பணம் கிடைக்காத ஆத்திரத்தில் வீட்டிற்கு தீவைத்த கொள்ளையர்கள்

தேவகோட்டையில் கொள்ளையடிக்க சென்ற வீட்டில் நகை-பணம் கிடைக்காததால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் அந்த வீட்டிற்கு தீவைத்து சென்றனர்.

Update: 2018-03-19 22:00 GMT
தேவகோட்டை,

தேவகோட்டை ராம்நகர், 1-வது வீதியில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியன். இவர் அப்பகுதியில் சைக்கிள் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். பாலசுப்பிரமணியனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அவருக்கு துணையாக குடும்பத்தினரும் சேலத்திற்கு சென்றனர். இதனால் வீடு பூட்டிக்கிடப்பதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் பாலசுப்பிரமணியன் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். பின்னர் வீட்டினுள் பல்வேறு இடங்களில் தேடியும் மர்ம ஆசாமிகளுக்கு நகை-பணம் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் வீட்டினுள் இருந்த துணிகள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை ஒரே இடத்தில் போட்டு தீவைத்துவிட்டு சென்றனர்.

பின்னர் பாலசுப்பிரமணியனின் வீட்டில் இருந்து புகை கிளம்பியதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தபோது வீட்டினுள் துணிகள் தீப்பிடித்து எரிந்தன. உடனடியாக இதுதொடர்பாக தேவகோட்டை தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வந்த தீயணைப்பு படையினர் வீட்டில் எரிந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து தேவகோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து வீட்டிற்கு தீவைத்து சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்.

சமீப காலமாகவே சிவகங்கை மாவட்டத்தில் குறிப்பாக தேவகோட்டை வட்டாரத்தில் வீடுபுகுந்து நகை, பணம் கொள்ளை சம்பவம் அதிகரித்துள்ளது. வீடுகள் மட்டுமின்றி கடைகளிலும் மர்ம ஆசாமிகள் தொடர்ந்து கைவரிசை காட்டி வருகின்றனர். இந்தநிலையில் தான் தற்போது நகை-பணம் கிடைக்காததால் வீட்டிற்கு கொள்ளையர்கள் தீவைத்து சென்றுள்ளனர். இதேபோன்று ஏற்கனவே தேவகோட்டையில் 2 வீடுகளில் நகை-பணம் கிடைக்காத ஆத்திரத்தில் கொள்ளையர்கள் தீவைத்து சென்றுள்ளனர். தற்போது நடந்துள்ள சம்பவம் 3-வது முறையாகும். எனவே இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் கொள்ளையர்களை போலீசார் தனிப்படை அமைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்