கண்ணமங்கலம் அருகே காளைவிடும் திருவிழா

கண்ணமங்கலத்தை அடுத்த கொங்கராம்பட்டு சித்திரசாவடி கேட் பகுதியில் காளை விடும் திருவிழா நடைபெற்றது.

Update: 2018-03-18 22:00 GMT
கண்ணமங்கலம்,

கண்ணமங்கலம் அருகே கொங்கராம்பட்டு சித்திரசாவடி கேட், ரெயில்வே நிலையத்திற்கு செல்லும் சாலையில் நேற்று யுகாதி பண்டிகையை முன்னிட்டு 2-ம் ஆண்டு காளை விடும் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான காளைகள் கொண்டு வரப்பட்டு வீதியில் வேகமாக ஓட விடப்பட்டது.

காளைகள் ஓடும்போது ஏராளமான இளைஞர்கள் வீதியெங்கும் காளைகளுக்கு உற்சாகப்படுத்தும் விதமாக விசிலடித்தும், காளைகள் மீது கைகளால் தட்டியும் ஆரவாரம் செய்தனர். மேலும் ஏராளமான ஆண்கள், பெண்கள் அருகிலுள்ள மாடி வீடுகளில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேடிக்கை பார்த்தனர்.

காளைகள் ஓடி திரும்பும் இடத்தில் விழுப்புரம் - காட்பாடி ரெயில்வே பாதை இருந்ததால், ரெயில்வே போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அத்துடன் கடந்த 9-ந் தேதி கீழ்பள்ளிப்பட்டு கிராமத்தில் காளைவிடும் திருவிழா நடந்த போது, காளை ஒன்று வழிதடுமாறி ரெயில்வே தண்டவாளத்தில் ஓடியபோது பின்னால் வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் மயிரிழையில் உயிர் தப்பியது.

இதனால் ரெயில் வரும் நேரங்களில் காளைகள் ஓடாதவாறு சுமார் 10 நிமிட நேரங்கள் அவ்வப்போது நிறுத்தப்பட்டு, ரெயில் சென்ற பின் காளைகள் ஓடவிடப்பட்டது. இதையும் மீறி சில காளைகள் ரெயில்வே தண்டவாளத்தில் சென்றபோது, உரிமையாளர்கள் மீட்டுச் சென்றதால் அசம்பாவிதம் நேராமல் தவிர்க்கப்பட்டது.

இந்த விழாவில் வேகமாக ஓடி முதலிடம் பெற்ற காளைக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.45 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.40 ஆயிரமும் வழங்கப்பட்டது. மேலும் 60 காளைகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.

விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில் மேற்பார்வையில், கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் விநாயகமூர்த்தி, ராஜா மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சார்பில் விழா குழுவினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்