அன்பில் கிராமத்தில் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் பள்ளி மாணவர்கள் உள்பட 34 பேர் காயம்

அன்பில் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் பள்ளி மாணவர்கள் உள்பட 34 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2018-03-18 22:45 GMT
லால்குடி,

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த அன்பில் கிராமத்தில் மகாமாரியம்மன் கோவில் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறப்பட்டு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கினர். இதைத்தொடர்ந்து நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வதற்காக புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, அரியலூர், பெரம்பலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 616 காளைகள் அழைத்து வரப்பட்டன. இந்த காளைகளை கால்நடை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். இதேபோல் மாடுபிடி வீரர்களை டாக்டர் குழுவினர் பரிசோதனை செய்ததில் 7 வீரர்கள் மாடுகளை பிடிக்க அனுமதிக்கப்படவில்லை. 462 வீரர்கள் தகுதி பெற்றனர்.


ஜல்லிக்கட்டை லால்குடி தாசில்தார் ராகவன் தொடங்கி வைத்தார். வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. அந்த காளைகள் சீறிப்பாய்ந்து வந்தன. இதில் சில காளைகளை வீரர்கள் அடக்கினர். சில காளைகள் பிடிபடாமல் துள்ளிக்குதித்து இலக்கை தாண்டி சென்றது. ஒரு சில காளைகள் தன்னை பிடிக்க வந்த வீரர்களை கீழே தள்ளி காலால் மிதித்தும், கொம்பால் முட்டியும் தூக்கி வீசின.

இந்த ஜல்லிக்கட்டில் மொத்தம் 34 பேர் காயம் அடைந்தனர். ஜல்லிக்கட்டு காளைகள் வெளியேறும் இடத்தில் நின்று வேடிக்கை பார்த்த பள்ளி மாணவர்களான மேட்டுப்பட்டி அசோக் மகன் காளீஸ்வரன்(வயது 12), புள்ளம்பாடி லெட்சுமணன் மகன் சசிராமன்(11) ஆகியோர் ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் படுகாயம் அடைந்தனர். இதேபோல காளையை பிடிக்க முயன்ற திருச்சி பிச்சாண்டார்கோவில் பகுதியை சேர்ந்த மாடுபிடி வீரர் சரண்ராஜ்(23) படுகாயம் அடைந்தார். காயமடைந்தவர்களுக்கு ஜல்லிக்கட்டு மைதானம் அருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் காளீஸ்வரன், சசிராமன், சரண்ராஜ் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டுக்கான பாதுகாப்பு பணியில் லால்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு ரமேஷ்பாபு தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜயா, சப்–இன்ஸ்பெக்டர்கள் சதீஷ்குமார், சரவணகுமார் மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்