மறையூர் அருகே ஆற்றில் மூழ்கி வக்கீல் பலி நண்பர்களின் கண்முன்னே நடந்த பரிதாபம்

மறையூர் அருகே ஆற்றில் மூழ்கி சென்னை வக்கீல் பரிதாபமாக இறந்தார். நண்பர்களின் கண்முன்னே இந்த பரிதாப சம்பவம் நடந்தது.

Update: 2018-03-18 22:15 GMT
மறையூர்,

சென்னை மதுரவாயல் பல்லவன் நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 33). இவர், தனது நண்பர்கள் 5 பேருடன் இடுக்கி மாவட்டம் மறையூருக்கு நேற்று முன்தினம் காரில் சுற்றுலா வந்தார். காந்தலூரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்து சுற்றுலா இடங்களை பார்த்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை கண்ணியங்காடி பகுதியில் ஓடும் ஆற்றில் அவர்கள் குளிக்க சென்றனர். அப்போது சரவணன் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் தத்தளித்தபடி கூச்சல் போட்டுள்ளார். உடன் சென்ற நண்பர்கள், அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் நீரில் மூழ்கினார்.

இதற்கிடையே அங்கு குளித்து கொண்டிருந்தவர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அது பலனளிக்கவில்லை. இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மூணாறு தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் நீரில் மூழ்கிய சரவணனை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு பாறை இடுக்கில் சிக்கியிருந்த சரவணனின் உடலை மீட்டனர். இதையடுத்து அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக மறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலா வந்த இடத்தில் ஆற்றில் மூழ்கி வக்கீல் இறந்த சம்பவம் நண்பர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்