ஆண்டிப்பட்டி அருகேயுள்ள வைகை அணை நீர்மட்டம் 32 அடியாக குறைந்தது குடிநீர் பற்றாக்குறை அபாயம்

ஆண்டிப்பட்டி அருகேயுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 32 அடியாக குறைந்துள்ளது. இதனால் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

Update: 2018-03-18 22:15 GMT
ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் குறைந்தது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம், தற்போது 32.32 அடியாக குறைந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் மழை எதுவும் பெய்யாத காரணத்தால், வைகை அணைக்கான நீர்வரத்து அடியோடு நின்றது. வைகை அணையை பொறுத்த வரையில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மட்டுமே நீர்ஆதாரமாக விளங்குகிறது. நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 63 கனஅடியாக இருந்தது. இதன்காரணமாக மதுரை மாநகர் மற்றும் சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்ட பகுதிகளில் கோடைகாலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. தற்போது இருக்கும் தண்ணீரை தென்மேற்கு பருவமழை தொடங்கும் வரையில் பயன்படுத்த வேண்டும் என்பதால், கோடையில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை சமாளிப்பது எப்படி? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை உயர்மட்ட அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வைகை அணையில் இருக்கும் தண்ணீரின் மூலம் அடுத்து வரும் 60 நாட்களுக்கும் குறைவாகவே குடிநீர் வழங்க முடியும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. அங்கிருந்து குடிநீருக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 200 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் வைகை அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று காலை 6 மணி நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 32.32 அடியாக காணப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 155 கனஅடி நீர்வரத்து உள்ளது. மதுரை மாநகர், சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்காக அணையில் இருந்து வினாடிக்கு 60 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் மொத்த நீர்இருப்பு 469 மில்லியன் கனஅடியாக காணப்பட்டது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு விவரம் வருமாறு (மில்லிமீட்டரில்):– பெரியாறு–7, தேக்கடி–10, கூடலூர்–16, சண்முகாநதி அணை–14, உத்தமபாளையம்–10, வைகை அணை–11.8, மஞ்சளாறு அணை–3.

மேலும் செய்திகள்