16 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை பழங்காநத்தத்தில் ஜல்லிக்கட்டு, மாடுகள் முட்டி 52 பேர் காயம்

மதுரை பழங்காநத்தத்தில் 16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டி 52 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2018-03-18 22:00 GMT
மதுரை,

மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள ஊர்காவலன் சாமி கோவில் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதற்காக பழங்காநத்தம் மந்தை திடலில் வாடிவாசல் அமைக்கப்பட்டிருந்தது. மாடுபிடி வீரர்களை தனித்தனியாக அடையாளம் காணும் வகையில் அவர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டு இருந்தன.

ஜல்லிக்கட்டு தொடங்குவதற்கு முன்னதாக, அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கலெக்டர் வீரராகவராவ் ஒலி பெருக்கி மூலம் கேட்டு கொண்டார். அவர் ஜல்லிக்கட்டு விதிமுறைகளை வாசித்தார். அதன்பின் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடக்கி வைத்தார்.

முதலில் கோவில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. அதன் பிறகு, வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

சில காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு சவால் விடும் வகையில் சீறிப்பாய்ந்தன. அதேபோல் காளைகளுக்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்ற எண்ணத்தில் மாடுபிடி வீரர்களும் காளைகளை பிடித்தனர்.

பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை பிடித்த மாடுபிடி வீரர்களுக்கும் செல்போன், சைக்கிள்கள், பட்டுச் சேலைகள், பாத்திரங்கள், பீரோ, கட்டில், மோட்டார் சைக்கிள், தங்ககாசு போன்றவை பரிசாக வழங்கப்பட்டன.

மாலை 4 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. 600 காளைகள் பதிவு செய்ததில் 490 காளைகள் போட்டியில் சீறிப்பாய்ந்தன. 479 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்ததில் 450 பேர் களத்தில் இறங்கி காளைகளை அடக்கினர்.

16 வருடத்திற்கு பிறகு இங்கு ஜல்லிக்கட்டு நடைபெறுவதால், இதனை கண்டுகளிப்பதற்காக மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் வந்து குவிந்து இருந்தனர். காளைகள் முட்டியதில் 52 பேர் காயம் அடைந்தனர்.

இவர்களில் 9 பேர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்