‘தமிழ் வாழ்ந்தால் தான் தமிழன் தலைநிமிர்ந்து வாழமுடியும்’ கனிமொழி எம்.பி. பேச்சு

தமிழ் வாழ்ந்தால் தான் தமிழன் தலைநிமிர்ந்து வாழமுடியும் என்று காரைக்குடியில் நடந்த நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. கூறினார்.

Update: 2018-03-18 23:00 GMT
காரைக்குடி,

காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் காந்திய தொண்டர் மன்றத்தின் சார்பில் “தமிழ் எங்கள் உயிர் என்பதாலே” என்ற தலைப்பில் சிந்தனை அரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பெலிக்ஸ் தலைமை தாங்கினார். விஜயராகவன் முன்னிலை வகித்தார். அழகப்பன் வரவேற்றார். நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா, பேராசிரியர் அப்துல்காதர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கனிமொழி எம்.பி. தனது உரையில் கூறியதாவது:-

செட்டிநாடு தமிழின் உயிர்நாடி பகுதி. இங்கு தமிழ் பேசுவது மகிழ்ச்சியினையும், பெருமையினையும் அளிக்கிறது. உலகமயமாதல் குறித்து இன்று பலர் பெருமை பேசுகின்றனர். ஆனால் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே புலவர் கனியன் பூங்குன்றனார் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று பாடி இன்றைய உலகை வியக்க வைத்துள்ளார். தாய் மொழியே மனிதனுக்கு முதல் பெருமை. தாய் மொழி காக்க தன்னுயிரையே மாய்த்துக்கொண்டவர்கள் தமிழர்களை தவிர வேறு யாருமில்லை.

திரிபுராவில் லெனின் சிலையை சிலர் சேதப்படுத்தி அப்புறப்படுத்தினர். இதனை அந்த மாநில மக்கள் வேதனையோடு சகித்துக்கொண்டனர். ஆனால் தமிழகத்தில் பெரியார் சிலை மீது கை வைப்போம் என்று சொன்னவுடன் மாநிலமே பற்றி எரிகிறது. காரணம் பெரியாரின் கருத்துகளில் உள்ள வீரியமும் உண்மையுமே. சிலர் பெரியாரை மாய்த்து திராவிடத்தை ஒழித்துவிட்டு தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கலாம் என நினைக்கின்றனர். அப்படி ஒரு சூழலை உருவாக்க நினைத்தால் திராவிடம் தனித்து நிற்கும். மத்திய அரசு மீண்டும் இந்தி திணிப்பில் ஈடுபட்டுள்ளது. நமது இனத்தையும், அடையாளத்தையும் அழிக்க மொழியை சிதைக்கின்றனர். அவர்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. தமிழ் வாழ்ந்தால் தான் தமிழன் தலை நிமிர்ந்து வாழ முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன் எம்.எல்.ஏ., தென்னவன், தி.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சாமி.திராவிடமணி, தொழில் அதிபர் பி.எல்.படிக்காசு, பள்ளத்தூர் ரவி, முன்னாள் நகர்மன்ற தலைவர் முத்துத்துரை, தி.மு.க. நகர செயலாளர் குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர் கரு.அசோகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக காரைக்குடியில் தி.மு.க. மகளிரணி ஆய்வு கூட்டத்திற்கு சென்ற கனிமொழி எம்.பி. தி.மு.க. கொடியேற்றி வைத்தார். 

மேலும் செய்திகள்