தமிழர்கள் அறிவியல் தொழில்நுட்பத்துடன் செயல்பட்டால் மட்டுமே முன்னேற முடியும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேட்டி

தமிழர்கள் அறிவியல் தொழில்நுட்பத்துடன் செயல்பட்டால் மட்டுமே முன்னேற முடியும் என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

Update: 2018-03-18 22:00 GMT
மேட்டூர், 

மேட்டூரில் அமைந்துள்ள மால்கோ வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அப்துல்கலாம் நினைவு அறிவியல் பூங்கா திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் பள்ளி முதல்வர் தேவராஜிலு வரவேற்றார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு, அப்துல்கலாம் நினைவு அறிவியல் பூங்காவை திறந்து வைத்து பேசினார். மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

தமிழ் மற்றும் தமிழர்கள் அறிவியல் தொழில்நுட்பத்துடன் செயல்பட்டால் மட்டுமே முன்னேற முடியும். மனிதன் யோசிக்க ஆரம்பிக்கும் பொழுது அறிவியல் ஆராய்ச்சி தொடங்கி விடுகிறது. ஆப்பிள் ஏன் கீழே விழுகிறது? என்று யோசித்தபோது நியூட்டனின் புவியீர்ப்பு விசை கண்டுபிடிக்கப்பட்டது. நிலவில் ஆரம்பகாலத்தில் ஆராய்ச்சி செய்ய ஆம்ஸ்ட்ராங் ஒரு பகுதியில் மட்டும் ஆய்வு செய்துவிட்டு தண்ணீர் இல்லை என்று கூறினார். தற்போது அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்து தண்ணீர் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை பணி செய்கிறார்கள். ஆய்வில் இருக்கும் போது சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்களிலும் குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகளிடம் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டால் அடுத்த தலைமுறையினரின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்.

ஆரம்பக்கல்வி முதல் பட்டப்படிப்பு வரை அரசு பள்ளி மற்றும் கல்லூரியில் படித்துள்ளேன். அரசு பள்ளிகளில் அனைத்து வசதிகளும் உள்ளன. மாணவர்கள் எந்த பள்ளிகளில் படிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. படிப்பை உணர்ந்து படிக்கவேண்டும்.

இந்திய மாணவர்கள் மற்ற துறைகளில் சிறந்து விளங்குவது போல் அறிவியல் துறையிலும் சிறந்து விளங்க வேண்டும். மாணவர்கள் கேள்வி கேட்கும் திறனை வளர்த்து கொண்டால் வாழ்க்கையில் முன்னேறலாம். முன்பெல்லாம் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பி வந்தோம். தற்போது மாதந்தோறும் செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது.

இவ்வாறு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

மேலும் செய்திகள்