நெல்லையப்பர் கோவிலில் வருகிற ஏப்ரல் 27-ந் தேதி கும்பாபிஷேகம் திருப்பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் ராஜலட்சுமி தகவல்

நெல்லை நெல்லையப்பர் கோவிலில் கும்பாபிஷேகம் வருகிற ஏப்ரல் மாதம் 27-ந் தேதி நடைபெறும் என்று திருப்பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் ராஜலட்சுமி கூறினார்.

Update: 2018-03-18 22:00 GMT
நெல்லை,

நெல்லை நெல்லையப்பர் கோவிலில் கும்பாபிஷேகம் வருகிற ஏப்ரல் மாதம் 27-ந் தேதி நடைபெறும் என்று திருப்பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் ராஜலட்சுமி கூறினார்.

அமைச்சர் ஆய்வு

நெல்லை டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகளை தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

பின்னர் அமைச்சர் ராஜலட்சுமி நிருபர்களிடம் கூறியதாவது:-

பழமையான கோவில்


நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவில் 14.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. சுவாமி மற்றும் அம்பாளுக்கு தனித்தனியே கோவில் அமையப்பெற்று சங்கிலி மண்டபத்தால் இணைக்கப்பட்டு, நெல்லை டவுன் மையப்பகுதியில் அழகுபெற அமைந்துள்ள பழமையான கோவில் ஆகும்.

இந்த கோவில் கி.பி. 7-வது நூற்றாண்டில் பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது ஆகும். 5 கோபுரங்களுடன் உள்ளது.

இந்த கோவிலில் சுவாமியாக நெல்லையப்பரும், அம்பாளாக காந்திமதி அம்பாளும் பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலித்து வருகின்றனர்.

முழுவீச்சில் பணிகள்

இந்த கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சரால் சட்டசபையில் 2017-2018-ம் ஆண்டு மானிய கோரிக்கை அறிவித்தபடி தற்போது திருப்பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

திருப்பணிகள் தொடர்பாக தொல்லியல் துறையினர், ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் குழு, யுனெஸ்கோ நிறுவனத்தினர் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை ஸ்தபதிகள் ஆகிய வல்லுனர்கள் நெல்லையப்பர் கோவிலை ஆய்வு செய்து அறிக்கை வழங்கியதன் அடிப்படையில் ரூ.4.92 கோடி செலவில் 135 திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் கோவிலில் அம்பாள் சன்னதி 2-வது பிரகாரம் தென்மேற்கு திசையில் உள்ள கல்மண்டபம் ரூ.71 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டு வருகிறது. தற்போது கோபுரங்கள், விமானங்கள், மரச்சிற்ப வேலைகள், கல்தூண்களை சுத்தம் செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

கும்பாபிஷேகம்

இதையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி, வருகிற ஏப்ரல் மாதம் 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.40 மணி முதல் 5.10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இவ்வாறு அமைச்சர் ராஜலட்சுமி கூறினார்.

வியாபாரிகள் கோரிக்கை

தொடர்ந்து அமைச்சர் ராஜலட்சுமியிடம் கோவில் வளாகத்தில் கடை நடத்தி வரும் வியாபாரிகள் மனுகொடுத்தனர். அதில் மதுரை கோவிலில் ஏற்பட்ட தீவிபத்தை காரணம் காட்டி நாங்கள் நடத்தி வரும் கடைகளை காலி செய்யும்படி நோட்டீசு வழங்கப்பட்டு உள்ளது. எனவே நாங்கள் தொடர்ந்து கடை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

மேலும் செய்திகள்