விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள கூட்டுறவு சங்க தேர்தலையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி கூட்டுறவு சங்க தேர்தலை சிறப்பாக நடத்தி முடிப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னர் அவர் கூறுகையில், தேர்தல் பணிக்கு அரசு பணியாளர்களை நியமிக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் அலுவலர்கள் தேவையான வாக்குப்பெட்டிகள், வாக்குப்பதிவு பொருட்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தேர்தலையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிய வேண்டும், தேர்தல் பணியாளர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற அனைவரும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பாலகிருஷ்ணன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.