சேர்வலாறு அணைப்பகுதியில் பலத்த மழை: அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

சேர்வலாறு அணைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

Update: 2018-03-18 21:15 GMT
விக்கிரமசிங்கபுரம்,

சேர்வலாறு அணைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

பலத்த மழை

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அணைப்பகுதி மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

கடந்த 14-ந் தேதி சேர்வலாறு அணைப்பகுதியில் பலத்த மழை பெய்தது.

இதனால் ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 30 அடி உயர்ந்தது.

அணையில் நடந்து வரும் புனரமைப்பு பணிகள் காரணமாக அணைக்கு வந்த தண்ணீர் முழுவதும் அப்படியே திறந்து விடப்பட்டது. இதனால் கல்யாண தீர்த்த அருவி, அகஸ்தியர் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது.

இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுந்தது. அதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு

இதேபோல் சேர்வலாறு அணைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை கொட்டியது.

இதன் காரணமாக அணைக்கு நேற்று காலை அதிகப்படியான தண்ணீர் வந்ததையடுத்து அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. நேற்று முன்தினம் 19.68 அடியாக இருந்த அணை யின் நீர்மட்டம் நேற்று காலை 38.39 அடியாக உயர்ந்தது.

அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேறியதால் பாபநாசம் அகஸ்தியர் அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அதில் குளிப்பது ஆபத்து என்பதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் அகஸ்தியர் அருவியில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

மழை அளவு

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:-

பாபநாசம் -50, சேர்வலாறு -44, கொடுமுடியாறு -40, ராமநதி -20, கடனா நதி -18, அடவிநயினார் -15, கருப்பாநதி -10, மணிமுத்தாறு -2.40. தென்காசி -74, ஆய்குடி -61, செங்கோட்டை -42, சங்கரன்கோவில் -9, சிவகிரி -8, பாளையங்கோட்டை -2.20.

மேலும் செய்திகள்