நம்பிக்கையில்லா தீர்மானத்தால் மத்திய அரசுக்கு ஆபத்து இல்லை மத்திய மந்திரி அனந்தகுமார் பேட்டி

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் ஆதரவு இருக்கிறது.

Update: 2018-03-17 22:21 GMT
பெங்களூரு,

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் ஆதரவு இருக்கிறது. அதனால் நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு ஆபத்து இல்லை என்று மத்திய மந்திரி அனந்த குமார் தெரிவித்தார்.

பாதயாத்திரை

பா.ஜனதா சார்பில் ‘பெங்களூருவை பாதுகாப்போம்‘ என்ற பெயரில் பாதயாத்திரை நடைபெற்று வருகிறது. இந்த பாதயாத்திரை நேற்று பி.டி.எம். லே-அவுட் சட்டசபை தொகுதியில் நடைபெற்றது. இதில், மத்திய மந்திரி அனந்தகுமார் கலந்து கொண்டார்.

அப்போது அவரிடம் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர இருப்பது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

அரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை

“காங்கிரசாருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் நான் ஒன்று சொல்லிக்கொள்கிறேன். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும்(மக்களிடம்) ஆதரவு இருக்கிறது. அதனால் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை.

மத்திய அரசுக்கு முழு மெஜாரிட்டி உள்ளது. தெலுங்கு தேசம் கட்சி வேறு சில பிரச்சினைகளுக்காக பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகி இருக்கிறது. ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் போராட்டம் காரணமாக இந்த முடிவை தெலுங்கு தேசம் எடுத்துள்ளது.

ஜனநாயக மரபு தெரியவில்லை

ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சிக்காக மட்டும் மத்திய அரசு ரூ.24 ஆயிரம் கோடி வழங்கியுள்ளது. வேறு எந்த மாநிலத்திற்கும் இதுபோன்று மத்திய அரசு நிதி ஒதுக்கியதில்லை. அமராவதி உருவாவதற்கும், அங்கு உள்கட்டமைப்பு வசதிகள், அணைகள் கட்டுதல், நீர்ப்பாசனத்துறை, தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளுக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. குறிப்பாக ஏழை மக்கள் வீடுகள் கட்டுவதற்காகவும் நிதி வழங்கப்பட்டுள்ளது. பா.ஜனதா கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகினாலும், ஆந்திராவின் வளர்ச்சிக்காக அங்குள்ள ஏழை மக்களுக்காகவும் பா.ஜனதா தொடர்ந்து பாடுபடும்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் தங்களது இருக்கைகளில் இருந்து எழுந்து, சபாநாயகரை நோக்கி ஓடி வருகிறார்கள். சபாநாயகரின் முன்பாக அமர்ந்து கோஷமிடுகின்றனர். இதற்கு முன்பு எதிர்க்கட்சிகள் அவ்வாறு நடந்து கொண்டதில்லை. தங்களது கருத்தை தெரிவிக்க முடியாத பட்சத்தில் வெளிநடப்பு தான் செய்திருக்கிறது. காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு ஜனநாயக மரபு தெரியவில்லை.

காங்கிரசுக்கு அவப்பெயர்


முன்னாள் முதல்-மந்திரியான வீரப்ப மொய்லி, காங்கிரஸ் கட்சியில் பணம் பெற்று தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு டிக்கெட் வழங்குவதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்ற உண்மையை அவர் துணிவுடன் வெளியே தெரிவித்துள்ளார். ஆனால் அவரது கருத்தால் காங்கிரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டு இருப்பதை உணர்ந்து, தான் டுவிட்டரில் அவ்வாறு பதிவிடவில்லை என்று வீரப்ப மொய்லி கூறி வருகிறார்.

கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா ஆட்சியில் ஊழல் அதிகரித்து விட்டது. சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கும், முதல்-மந்திரி சித்தராமையாவுக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.”

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்