திருவண்ணாமலையில் கோழி இறைச்சி கழிவு கொட்டப்படுவதால் தொற்று நோய் பரவும் அபாயம்
திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் கோழி இறைச்சி கழிவு கொட்டப்படுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் நகராட்சி மேல்நிலைப் பள்ளி எதிரே நகராட்சிக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. இந்த இடத்தின் அருகில் ராகவேந்திரா நகர், திருவள்ளுவர் நகர், ராமஜெயம் நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்த இடத்தில் தினமும் இரவு நேரங்களில் சில மர்ம நபர்கள் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டி விட்டு செல்கின்றனர். மேலும் அந்த பகுதியில் குப்பையும் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது.
இவ்வாறு தொடர்ந்து கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் நாய்கள், காகங்கள் போன்றவை அவற்றை சாப்பிடுகின்றனர். இதனால் அந்த பகுதி சுகாதாரமின்றி காணப்படுகின்றன.
மேலும் கோழி இறைச்சி கழிவுகளை காகங்கள் தூக்கி கொண்டு வந்து நகராட்சி பள்ளியில் போட்டு விட்டு செல்கிறது.
அதுமட்டுமின்றி நாய்களும் அங்கிருந்து கோழி இறைச்சி கழிவுகளை குடியிருப்பு பகுதிகள் மற்றும் பள்ளி கூடத்திற்குள்ளும் போட்டு விட்டு ஓடி விடுகிறது. இதனால் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
மேலும் துர்நாற்றம் வீசுவதால், பள்ளியில் பகல் நேரங்களில் இருக்க முடியவில்லை என்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வழியாக தினமும் அதிகாலையில் முதியவர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். துர்நாற்றம் வீசுவதால் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
மேலும் காற்றினால் கோழி இறகுகள் பறக்கிறது. பறக்கும் கோழி இறகுகள் பக்கத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடுகின்றனர். இதனால் தொற்று நோய் பரவுவதற்கு முன்பு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.