சோமனூர் அருகே கழுத்தை அறுத்து வாலிபர் கொலை: யார் அவர்? போலீஸ் விசாரணை

சோமனூர் அருகே கழுத்தை அறுத்து வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அவர் யார்? கொலையாளிகள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-03-17 22:45 GMT
கருமத்தம்பட்டி,

கோவையை அடுத்த சோமனூர்் அருகே கரவளிமாதப்பூர் பகுதியில் நொய்யல் ஆற்றின் கரையில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் வாலிபர் பிணம் கிடந்தது. இது குறித்த தகவலின் பேரில் கருமத்தம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயசந்திரன், இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பிணமாக கிடந்தவருக்கு சுமார் 25 வயது இருக்கும். அவரது கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது. மேலும் உடலில் 4-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. ஆனால் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரிய வில்லை.

இதையடுத்து போலீசார் வாலிபரின் பிணத்தை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் கூறியதாவது:-

பிணமாக கிடந்த வாலிபர் நீல நிற ஜீன்ஸ் பேண்ட் மற்றும் வெள்ளை நிற சட்டை அணிந்திருந்தார். ஆனால் அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் கனி வரவழைக்கப்பட்டது. ஆனால் அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது.

அந்த வாலிபர் யார்? என்பதை முதலில் கண்டறிய வேண்டும். அதன்பிறகு தான் அவர் எதற்காக, யாரால் கொலை செய்யப்பட்டார் என்பதை கண்டுபிடிக்க முடியும். எனவே பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்