தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகியதால் எந்த பாதிப்பும் இல்லை, தங்க தமிழ்செல்வன் பேட்டி

டி.டி.வி. தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகியதால் எந்த பாதிப்பும் இல்லை என்று பரமக்குடியில் தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார்.

Update: 2018-03-17 23:00 GMT
பரமக்குடி,

பரமக்குடி தெளிச்சாத்தநல்லூர் அருகே நாளைமறுநாள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுக்கூட்டம் டி.டி.வி. தினகரன் தலைமையில் நடைபெறுகிறது. அதற்கான பணிகள் நடைபெற்று வருவதை அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- டி.டி.வி. தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகிச்சென்றதால் எந்தவித பாதிப்பும் இல்லை. 20-ந்தேதி பரமக்குடிக்கு வரும் டி.டி.வி. தினகரனுக்கு பிரமாண்டமான முறையில் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

ராமேசுவரத்தில் 5,000 பேர் டி.டி.வி. தினகரன் முன்னிலையில் கட்சியில் இணைகின்றனர். தற்போது தொடங்கப்பட்டுள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பது அமைப்பு தான். தேர்தல் ஆணையத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளது. மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்ற கூறி வாழ்ந்த ஜெயலலிதாவின் நினைவாகத்தான் மக்களை நேசிக்கும் வகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என பெயர் வைக்கப்பட்டுஉள்ளது. இது உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் அனைத்திலும் போட்டி யிட்டு 100 சதவீதம் வெற்றி பெறுவோம். இதில் இருந்துகொண்டே அ.தி.மு.க.வையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்டெடுப்போம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு வாய்ப்பே இல்லை. மத்திய அரசுக்கு சந்திரபாபு நாயுடு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்டது போல் தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வில் உள்ள 37 எம்.பி.க்களும் அவர்களது ஆதரவை விலக்கிக்கொள்வோம் என மிரட்டினாலே போதும். மத்திய அரசு பணிந்து விடும். அவர்கள் இதை செய்யாத வரைக்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது. மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் நேரத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த 37 எம்.பி.க்களும் எதிர்த்து வாக்களித்தால் பா.ஜ.க. அரசு கவிழ்ந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கழக மருத்துவ அணி செயலாளர் முத்தையா, மாவட்ட செயலாளர் வ.து.ந.ஆனந்த், அமைப்பு செயலாளர்கள் முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன், ஜி.முனியசாமி, சோமாத்தூர் சுப்பிரமணியன், ஜெயலலிதா பேரவை செயலாளர் மாரியப்பன் கென்னடி, மகளிரணி இணை செயலாளர் கவிதா சசிக்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்