பிரபல கொள்ளையன் கைது; 10 பவுன் நகைகள் பறிமுதல்

சென்னை மாதவரத்தில் பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 10 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2018-03-17 22:30 GMT
செங்குன்றம்,

சென்னை மாதவரம் பால்பண்ணை பேங்கர்ஸ் காலனி 2-வது தெருவில் வசிப்பவர் கிருஷ்ணகுமார். கடந்த 4-ந்தேதி இவரது வீட்டில் 4 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் திருட்டு போனது. இதேபோல், கடந்த டிசம்பர் மாதம் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 3 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது.

பால்பண்ணை பகுதியில் தொடர் திருட்டுகளில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்க மாதவரம் போலீஸ் உதவி கமிஷனர் ஜெயசுப்பிரமணியன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் இரவு தனிப்படை போலீசார் மஞ்சம்பாக்கம் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த நபர் நிற்காமல் வேகமாக சென்றார். உடனே தலைமைக்காவலர் குமாரசாமி மோட்டார்சைக்கிளில் விரட்டிச்சென்று மாதவரம் மேம்பாலம் அருகே அந்த நபரை மடக்கி பிடித்தார். விசாரணையில் அவர், புழல் பத்மாவதி நகர் 4-வது தெருவை சேர்ந்த மணிகண்டன் என்கிற மின்னல் மணிகண்டன் (வயது 40) என்பதும், போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட பிரபல ரவுடி வெள்ளை ரவியின் மைத்துனர் என்பதும் தெரியவந்தது.

பிரபல கொள்ளையனான இவர் மீது செங்குன்றம், புழல், எம்.கேபி.நகர் உள்பட 15-க்கும் மேற்பட்ட போலீஸ் நிலையங்களில் கொள்ளை வழக்குகள் உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொள்ளை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் நவம்பர் மாதம் சிறையில் இருந்து வெளியே வந்த மணிகண்டன் பல்வேறு பகுதிகளில் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மாதவரம் பால்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்