வலங்கைமானில் தீயில் எரிந்து கூரை வீடு- வெல்டிங் பட்டறை நாசம்

வலங்கைமானில் தீயில் எரிந்து வீடு-வெல்டிங் பட்டறை நாசம் அடைந்தது. இதில் ரூ.50 ஆயிரம் பொருட்கள் சேதம் அடைந்தன.

Update: 2018-03-16 23:47 GMT
வலங்கைமான்,

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான்-கும்பகோணம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கல்யாணி (வயது 55). இவர் கூரை வீட்டில் வசித்து வருகிறார். இவர் மகாமாரியம்மன் கோவில் அருகில் தள்ளுவண்டியில் இட்லி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் வியாபாரத்தை முடித்து விட்டு கல்யாணி வீட்டுக்கு வந்தார்.

பின்னர் அவர் வழக்கம் போல் மாரியம்மன் கோவிலுக்கு தூங்க சென்றுள்ளார். இந்த நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் அவருடைய கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மளமளவென அருகில் உள்ள முருகேசன் என்பவரின் வெல்டிங் பட்டறைக்கும் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த வலங்கைமான் தீயணைப்பு நிலைய அலுவலர் மூர்த்தி தலைமையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மேலும் தீ பரவாமல் அணைத்தனர். முன்னதாக வெல்டிங் பட்டறையில் இருந்த கியாஸ் சிலிண்டர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டன.

இந்த தீவிபத்தில் கூரை வீடும், வெல்டிங் பட்டறையும் எரிந்து நாசமானது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள், உடைகள், மின்சாதன பொருட்களும், வெல்டிங் பட்டறையில் இருந்த மின் மோட்டார்கள், வெல்டிங் உபகரண பொருட்கள் உள்ளிட்டவைகள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தன. இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் என தெரிகிறது. நள்ளிரவில் ஏற்பட்ட தீவிபத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்