குரங்கணி காட்டுத்தீ விபத்தில் சிக்கி பலி: ஆசிரியை அனுவித்யா உடலுக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
குரங்கணி காட்டுத்தீ விபத்தில் சிக்கி பலியான தனியார் பள்ளி ஆசிரியை அனுவித்யா உடலுக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
தாம்பரம்,
சென்னை சேலையூரை அடுத்த ராஜகீழ்ப்பாக்கம் பகுதியைச்சேர்ந்தவர் முத்துமாலை. தொழில்அதிபர். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சிறுதொண்டநல்லூர்.
இவருடைய மகள் அனுவித்யா (வயது 25). எம்.எஸ்சி சைக்காலஜி படித்துள்ள இவர், மந்தைவெளியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். மாரத்தான், நீச்சல், சைக்கிளிங், மலையேற்றம் போன்றவற்றில் ஆர்வமாக கலந்து கொள்வார்.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்து தேனி மாவட்டம் குரங்கணிக்கு மலையேற்ற குழுவினருடன் சென்ற அனுவித்யா, கடந்த ஞாயிற்றுக்கிழமை குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீ விபத்தில் சிக்கி உடல் கருகினார்.
பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அனுவித்யா, நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அனுவித்யாவின் உடல் நேற்று அதிகாலை மதுரையில் இருந்து சென்னை ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர்.
அனுவித்யாவின் உடலுக்கு தமிழக நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் பிரகாஷ், தென்சென்னை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான சிட்லபாக்கம் ராஜேந்திரன், தமிழ்நாடு வணிகர்பேரவை தலைவர் வெள்ளையன், தாம்பரம் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, வணிகர்பேரவை மாவட்ட தலைவர் வெ.ஆ.கருணாநிதி உள்பட ஏராளமான அரசியல் கட்சியினர், வியாபாரிகள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
மிகவும் தைரியசாலியான அனுவித்யாவின் மரணம், அவரது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அவரது உறவினர்கள் கூறியதாவது:-
மாமிசம் சாப்பிடுவதை தவிர்த்தார்
அனுவித்யா இரக்கமனம் கொண்டவர். எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்தவேண்டும் என்பதற்காக மாமிசம் சாப்பிடுவதை தவிர்த்தார். மீன்கூட ஒரு உயிர், அதை சாப்பிடக்கூடாது என அசைவத்தை தவிர்த்தார். வயதான முதியவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தார்.
எல்லா மனிதர்களிடமும் அன்பு செலுத்துவதைபோல வாயில்லா ஜீவன்களான மிருகங்கள் மீதும் அதிக அன்பு செலுத்தி வந்தார். ஒருமுறை சாலையில் அடிபட்டு கிடந்த நாயை தினமும் வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து காப்பாற்றினார்.
நடவடிக்கை எடுக்கவேண்டும்
குரங்கணி தீ விபத்தின்போது தங்களுக்கு உதவிய கிராம மக்களை சிகிச்சை முடிந்து நல்லபடியாக வந்து சந்திப்பதாக கூறியுள்ளார். தீ விபத்தில் 90 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டு உயிருக்கு போராடிய நிலையிலும், மருத்துவமனையில் தன்னை பார்க்க வந்தவர்களை தனக்கு ஒன்றும் இல்லை. நல்லபடியாக வீட்டுக்கு வருவேன் எனக்கூறி தைரியப்படுத்தி உள்ளார்.
உலகில் ஒரு உயிருக்கும் தீங்கு வரக்கூடாது என்பதை கொள்கையாக கொண்டு வாழ்ந்த அனுவித்யா, தற்போது தீயில் கருகி, எங்களை கலங்க வைத்துவிட்டு மறைந்து வி்ட்டார். அனுவித்யாவுக்கு திருமணம்செய்து வைக்க அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வந்தனர்.
மணக்கோலத்தில் பார்க்க வேண்டிய அவளை இப்படி காட்டு தீயின் கொடூர தாண்டவத்துக்கு பலி கொடுப்போம் என கனவிலும் நினைக்கவில்லை. இந்த சம்பவத்தை பாடமாக கொண்டு இதுபோல விபத்துக்கள் இனி ஏற்படாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் பெண்ணுக்கு ஏற்பட்ட கதிபோல வேறு யாருக்கும் இனி ஏற்படக்கூடாது.
இவ்வாறு அவர்கள் உருக்கமாக தெரிவித்தனர்.
பின்னர் அனுவித்யாவின் உடல் சிட்லபாக்கம் மயானத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, அங்கு தகனம் செய்யப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.